திருச்சி சந்துக்கடையில் அமைந்துள்ளது இந்த சீனிவாசா நெய் ஸ்டோர். இந்த கடை 4 தலைமுறைகளைக் கடந்து சுமார் 70 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. திருச்சியை சேர்ந்தவர்கள் இந்த கடையை தெரியாமல் இருக்க முடியாது. ஏனென்றால் அந்த அளவுக்கு தரத்தில் சிறந்து விளங்குகின்றது இந்த கடை. வெறும் மோர், வெண்ணை, நெய் ஆகிய பொருட்களை வைத்து இந்த அளவுக்கு இந்த கடை புகழ்பெற்ற இருப்பதற்கு காரணம்  அவர்களின் தரம் மாறாமல் இருப்பது தான். ஏனெனில், இந்த பொருட்களில் அதிக அளவு வைட்டமின்கள், புரதம், நீர்ச்சத்து போன்ற பல்வேறு சத்துக்கள் கிடைக்கின்றன. இந்த பொருட்கள் அனைத்துமே நமக்கு எல்லா சூழ்நிலைகளிலும் தேவைப்படும் ஒன்றாக இருக்கின்றது. குறிப்பாக, வெயில் காலங்களில் இங்கு கிடைக்கும் மோர் மற்றும் அதன் விற்பனை எல்லையில்லா அளவுக்கு இருக்குமாம்.


அந்த அளவுக்கு இங்கு கிடைக்கும் மோர் ருசியாக இருக்கும் என்று கூறுகின்றனர். 70 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கு பார்த்தாலும் மாட்டு பால் கிடைக்கும். அந்த மாட்டு பாலை வைத்து தான் மற்ற பொருட்களை தயாரித்து வந்தனர். ஆனால், இந்த காலகட்டத்திலும் அதேபோன்று, மாட்டுப் பாலை வாங்கி அதில் இருந்து தயிர் எடுத்து மோர் கடைவது என்பது பொறுமைக்கு உதாரணமாக இருக்கும் ஒரு பணியாகும். அவற்றை இவர்கள் 70 ஆண்டுகளாக சலிக்காமல் செய்கின்றனர் என்றால், அதுவே இந்த கடையின் பிரபலத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது. 




மேலும் இங்கு கிடைக்கும் வெண்ணை பற்றி பார்த்தோமேயானால், இதனை சின்ன குழந்தைகள் கூட அப்படியே வாங்கி சாப்பிடுகின்றனர். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு இங்கு கிடைக்கும் வெண்ணையை வாங்கி கொடுக்கின்றனர். வெண்ணையை வாழை இலையில் வைத்து தான் கொடுக்கின்றனர்.  மேலும் ஐந்து ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் கூட இங்கு வாழை இலையில் வெண்ணெய் கொடுக்கின்றனர். இங்கு கிடைக்கும் வெண்ணையை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் வாங்கி விரும்பி சாப்பிடுகின்றனர்.  மேலும் இந்த வெண்ணெய் வாயில் வைக்கும்போது அப்படியே கரைந்து விடுகிறது.  இது திருச்சியின் பிரபலமான இடமான சந்தைக் கடையில் அமைந்துள்ள காரணத்தினால் அநேகமான மக்கள் இங்கு செல்கின்றனர். மேலும் இங்கு மோர் வாங்கும் போது அங்கு தயிரை நம் கண்முன்னே மத்தில் கடைந்து அதில் சிறிது உப்பு போட்டு நீர் சேர்த்து இஞ்சி மிளகாய் போன்ற எந்தவிதமான பொருட்களுமே சேர்க்காமல் அப்படியே நமக்குக் கொடுக்கின்றனர்.




எனவே இதனை பருகும்போது இதன் ருசியானது மாறாமல் அப்படியே இருக்கும். அதுதான் இந்த கடைக்கு ஒரு முக்கியமான சிறப்பு.  எப்போதுமே பரபரப்பாக இருக்கும்  இந்தக் கடையைப்பற்றி கடையின் நிர்வாகியிடம் கேட்டபோது, ”இந்த கடை தனது தாத்தா 1935 ஆம் ஆண்டு ஆரம்பித்ததாக கூறுகிறார். முதலில் இங்கு வந்தபோது வெறும் வாழைப்பழம் வியாபாரத்தை தொடங்கியதாகவும், அதில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை. இதன்காரணமாக, அவர் இந்த விற்பனையை கைவிட முயற்சியில் இருந்ததாகவும் கூறினார். அப்போது அருகே பால் கறக்கும் ஒருவர் மீதமுள்ள தயிரை தாத்தா கடையில் கொண்டுவந்து வைத்து விட, அந்த தயிரானது மக்களுக்கு மிகவும் பிடித்துவிட, தொடர்ந்து மக்கள் வாங்க ஆரம்பித்து விட்டதாக” அவர் கூறுகிறார்.




இதனை மனதில் வைத்தே இந்த தயிர் மற்றும் பால், வெண்ணை விற்பனையைத் தொடங்கலாம் என்று தனது தாத்தா முடிவெடுத்து அதனை நடத்தி வந்ததாகவும் அவர் கூறுகிறார். தனது தாத்தா மற்றும் தனது அப்பா அவரை தொடர்ந்து தான் இந்த கடையை தற்போது நடத்தி வருவதாக அவர் கூறுகிறார். மேலும் தினமும் சீசன் காலத்தில் 80 லிருந்து 90 லிட்டர் வரையிலும் சீசன் இல்லாத காலத்தில் 30 முதல் 40 லிட்டர் வரையும் பால் தினமும் வாங்கி அதனை காய்ச்சி உறை போட்டு வெண்ணை மற்றும் தயிர், மோர் ஆகியவை தயாரிக்கிறோம் என்று அவர் கூறினார். காலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை இங்கு வாடிக்கையாளர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். மேலும் வெகு தூரத்திலிருந்தும் வாடிக்கையாளர்கள் இங்கு வருவார்கள் என்றும் அவர் பெருமிதமாக கூறுகிறார்.




கடை வாடிக்கையாளர்களிடம் கேட்கும்போது, ”இந்த கடை பொருட்கள் தரம் மாறாமல் இருப்பதன் காரணமாக இங்கு வந்து அடிக்கடி மோர் குடிப்பது உண்டு. மேலும் அவ்வப்போது வெண்ணையும் வாங்கிக் கொள்வோம் என்றும் கூறுகின்றனர். இங்கு கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்பதன் காரணமாகவே, இங்குதான் எப்பொழுதுமே மோர் வெண்ணை தயிர் போன்ற பொருள் வாங்குவதாக” தெரிவிக்கின்றனர். 70 ஆண்டுகளாக தரம் மாறாமல் இருப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. இது போன்ற கடைகள் தனது தரத்தை மாற்றாமல் இருப்பது வியாபாரத்தில் புகழ் பெற நினைக்கும் அனைத்து விற்பனையாளர்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கும்.