புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்த கணேசன் மகன் சிவா (26). இவர் எம்.காம் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது அக்கா மகளான புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டையை சேர்ந்த வெற்றிவேல் மகள் பிரசன்னா தேவி (20)  இருவரும் தங்களது சிறுவயது முதலே பழகி வந்த நிலையில் இருவரும் கடந்த இரண்டு வருட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு பிரசன்னா தேவியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும்  ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் நாடியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமலதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் தஞ்சமடைந்த காதலர்களிடம்  விசாரணை நடத்தி  இருவரின் திருமணம் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 

 



 

இதனை தொடர்ந்து காதல் ஜோடிகள் கூறியது, நாங்கள்  இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வருகிறோம் என்றனர். மேலும்  தங்களது காதலை பெற்றோர்கள் ஏற்று கொள்ளவில்லை பல முறை எடுத்து கூறியும் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில்  இருவரது குடும்பத்தினரும் சமரச பேச்சில் ஈடுபட்ட காவல்நிலையம் வந்தனர். ஆனால் பிரசன்னா தேவி குடும்பத்தார் பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது பிரசன்னா தேவியின் தாய் தந்தையர் எனது மகள் எங்களுக்கு தேவையில்லை என்று எழுதிக்கொடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காதலர்களின் காவல்துறையினர்  கணவர் சிவாவுடன் பிரசன்னா தேவியை அனுப்பி வைத்தனர்.