பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலை மீது பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் கடந்த 15 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், இரவில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. கடந்த 16 ஆம் தேதி முருகன், வள்ளி-தெய்வாணை திருக்கல்யாண உற்சவமும், இரவில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. நேற்று முன்தினம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம், அலங்கார பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக காலை தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் தங்களது வயல்களில் விளைந்த விளை பொருட்களையும், ஆடு, மாடு, கோழிகளையும் காணிக்கையாக செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு முருகன், வள்ளி-தெய்வானைக்கு மலர்களால் சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாண உற்சவம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு சுவாமிகளுக்கு பட்டுசாத்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மாலை 3 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான், தண்டாயுதபாணி சுவாமி தேரில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு நாதஸ்வர இசை முழங்க, வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் அரோகரா பக்தி கோஷம் முழங்க தேர் கம்பீரமாக மலையை சுற்றி அசைந்தாடி வந்து நின்றது. அப்போது பக்தர்கள் சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்தனர். இதில் செட்டிகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ஆன்மிக சான்றோர்கள் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர்.
மேலும் பாதுகாப்பு பணியில் பாடாலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையின் பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், ஆய்வாளர் தமிழரசி, கோயில் செயல் அலுவலரும், தக்காருமான ஜெயலதா, எழுத்தர் தண்டபாணி தேசிகன் மற்றும் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர். இன்று (சனிக்கிழமை) காலை மீண்டும் தேரோட்டம் நடைபெற்று மாலையில் தேர் நிலையை வந்தடையும். அதனை தொடர்ந்து இரவில் தீர்த்தவாரி, கொடியிறக்குதல் நடைபெறும். பின்னர் சுவாமி செங்குந்தர் மண்டபம் வந்தடைவார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடைபெறும். இரவில் சுவாமி புறப்பட்டு சிவன் கோயில் வந்தடைவார். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சிவன் கோயிலில் பஞ்சமூர்த்திகள் பஞ்சவீதி உலா நடைபெறும். 22-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைபெறுகிறது.