மதுரை மாவட்டம்  மேலூர் கொன்னைபட்டியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் வயது 31. இவர் மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ஒருவருடன் மாடு வாங்கி விற்பதில் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவரது வீட்டிற்கு தாமரைச்செல்வன் அடிக்கடி சென்று வந்தார். அப்போது அவரது மகளான எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த 14 வயது சிறுமியிடம் தாமரைச்செல்வனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டனர். மேலும் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.  இந்நிலையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை, தாமரைச்செல்வன் கடத்தி சென்று உள்ளார். இதுதொட்பாக சிறுமியின் பெற்றோர் பொன்னமராவதி காவல்நிலையத்தில்  புகார் செய்துள்ளனர்.  அதைத்தொடர்ந்து காவல்துறையினர்  சிறுமியை மீட்டு விசாரித்ததில் தாமரைச்செல்வன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் தாமரைச்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

 



 

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா இன்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக தாமரைச்செல்வனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறையும், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 7 ஆண்டு சிறையும் ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.  மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் இழப்பீடாக தொகையாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் கூறினார். இந்த வழக்கில் ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதால் அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனையை தாமரைச்செல்வன் அனுபவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 



 

தமிழகத்தில் தொடர்ந்து சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயதில் முதியவர்கள் அதிக அளவில் பள்ளி மாணவிகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்து வருவது கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஆகையால் பெண் குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டு செல்வதற்கும், பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்கும் பெற்றோர்கள் தயக்கம் காண்பித்து வருகிறார்கள். ஆகையால் தமிழக அரசு சிறுமிகளின் வருங்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு இதுபோன்ற தவறான செயல் நடக்காமல் இருக்க  கடுமையான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.