சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் பொது போக்குவரத்தை அதிகப்படுத்தி எளிமைப்படுத்தவும், மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது இதனை தொடர்ந்து திருச்சி ,சேலம், திருநெல்வேலி ஆகிய இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ, பறக்கும் ரயில் உள்ளிட்ட அதி விரைவு போக்குவரத்து ரயில் திட்டத்தை செயல்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதில் முதல்கட்டமாக அதற்கான பூர்வாங்க பணிகளை அந்நிறுவனம் தொடங்கி உள்ளது. இதுகுறித்து அந்நிறுவன வட்டாரங்களில் விசாரித்தபோது.. மாநகரங்களில் ஏற்பட்டு வரும் ஒட்டு மொத்த வளர்ச்சியில் போக்குவரத்து துறை பங்கும் முக்கியமானது ஆகும். அதனை கருத்தில் கொண்டு மாநகர வளர்ச்சியில் பொது போக்குவரத்தின் பங்கை மேம்படுத்தும் வகையில் திருச்சி திருநெல்வேலி சேலம் ஆகிய இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ, மெட்ரோ லைட்,மெட்ரோ நியோ, பிஆர்டிஎஸ் போன்ற அதி விரைவு போக்குவரத்து திட்டங்களை ( மாஸ் டிரான்ஸிட் அமைப்பு) செயல்படுத்த தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

Continues below advertisement




 


அதன்படி தமிழகத்தின் இரண்டாம் நிலை மாநகரங்களில் ஒன்றான திருச்சி தமிழகத்தின் 4 வது  பெரிய நகரமாகவும், மாவட்ட தலை நகரமாகவும் உள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் திருச்சி மாநகரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் ஒரு மையமாக செயல்படும் திருச்சி நகரம் மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. புகழ்பெற்ற மத மற்றும் சுற்றுலாத் தலங்கள் காரணமாக பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மேலும் 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருச்சி மாவட்டத்தின் மக்கள்தொகை 27.22 லட்சமாகவும், மாநகராட்சியின் மக்கள் தொகை 9.16 லட்சமாகவும் உள்ளது. மாநகரத்தின் மக்கள் தொகை 10 லட்சத் துக்கும் அருகில் இருந்தாலும், மாநகரை ஒட்டி உள்ள முக்கிய பகுதிகள் விரிவாக்க பகுதிகள் என அனைத்தும் சேர்த்து விரைவில் மாநகராட்சி விரிவாக்கம் செய்த பின்னர், அடுத்த சில ஆண்டுகளில் மாநகரின் மக்கள் தொகை 20 லட்சத்தை எட்டும். அதனால் எதிர்கால பொதுப் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டும், மாநகரில் நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத போக்குவரத்து அமைப்பு கொண்ட நிலையை உருவாக்கும் வகையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


 




மேலும் அதற்கான மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைப்படி, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இப்பணிக்காக ரூபாய் 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணி தொடங்கும் நாளில் இருந்து 4 மாதங்களுக்குள் இந்த ஆய்வு பணி முடிக்கப்பட்டு அறிக்கை அளிக்க வேண்டும்.  அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். ஏற்கனவே ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் 2 ஆண்டுகளில் திருச்சியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடக்கபடும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில்  திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த பிள்ளையார் சுழி போடப்பட்டு இருப்பது திருச்சி  மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.