திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான திமுக விருப்ப மனு வழங்குதலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகார்களை மாணவிகளும் பெற்றோர்களும் தெரிவிக்கும் முறையை எளிதாக்க திட்டமிட்டுள்ளோம் எனவும், ஒவ்வொரு பள்ளியின் புகார் பலகையிலும் 14417, 1098 இடம் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அங்கு அருகில் உள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணையும் பதிவிட வேண்டும் என சொல்லி இருக்கிறோம் என்றார். தொடர்ந்து மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டு வருகிறது. இவற்றை முற்றிலுமாக தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்க்கொண்டு வருகிறது என்றார். மேலும் புகார்கள் வரும்பட்சத்தில் சம்பந்தபட்டவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.




குறிப்பாக வெறும் புகார் எண் மட்டும் கொடுத்தால் போதாது, எல்லா இடத்திலும் உலகியல் ரீதியாக கவுன்சிலிங் தேவைப்படுகிறது. இதற்கென உளவியல் ஆலோசனை வழங்க மாவட்டம் தோறும் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்க நேற்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர்கள் உடனான கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 14417 புகார் மையம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து நாளை சென்னையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன் எனவும், மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பது தான் அரசின் விருப்பம். பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள் யாராக இருந்தாலும் தயங்காமல் புகார் எண்ணை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்து புகார் தெரிவிக்கலாம். மேலும் பள்ளி நிர்வாகம் மாணவ, மாணவிகளின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும், பெற்றோர்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் பள்ளி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.




அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. 66 லட்சம் என்று இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 71 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. எந்தெந்த அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு அதிகம் தேவைப்படுகிறதோ அதை செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் வருகின்ற மாணவர்களை தக்க வைத்து கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் விருப்பம் என தெரிவித்தார். மேலும் RTE கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை முழு கட்டணம் செலுத்த வற்புறுத்தினால் புகார் தெரிவிக்கலாம் என்றார். தனியார் பள்ளி நிர்வாகம் புகார்கள் வரும் பட்சத்தில் அவற்றை மூடி மறைக்காமல் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.