வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் காலையில் வெயில் அடித்தது. அதன்பின் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை வரை மழை எதுவும் பெய்யவில்லை. இதேபோல் மாவட்டம் முழுவதும் காணப்பட்டது. கடலோர பகுதிகளிலும் மழை பெய்யவில்லை. ஆனாலும் புயலின் தாக்கம் இருக்கும் என்பதால் கடந்த 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 

 



 

'மாண்டஸ்' புயல் காரணமாக கடந்த 4 நாட்களாக ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இந்தநிலையில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி பகுதியில் பிடித்து வரப்பட்ட மீன்கள் இப்பகுதிக்கு விற்பனைக்கு வந்தது. இதனால் வெளியூர்களில் இருந்து மீன்களை வாங்க பொதுமக்கள் வந்திருந்தனர். மீனவர்கள் சரிவர கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாததால் மீன்கள் வரத்தும் குறைந்து காணப்பட்டது. இதனால் மீன்களின் விலை கிடு கிடுவென உயர்ந்தது. சாதாரண நேரங்களில் கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்படும் இறால் தற்போது ரூ.350-க்கும், ரூ.300-க்கு விற்பனையாகும் நண்டு தற்போது ரூ.450-க்கும் விற்பனையானது. இதேபோல் அனைத்து வகையான மீன்களும் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கூடுதலாக விற்பனையானது. இதனால் மீன் வாங்க வந்தவர்கள் மீன்களை அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனர். தற்போது இயல்புநிலை திரும்பியதால் நாளை (திங்கட்கிழமை) மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீன்களின் விலையும் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.