திருச்சி மாவட்டம் அல்லூர்ஜனதா நகரில் வசித்து வருபவர் சுவாமிநாதன் (வயது 54). பி.காம் பட்டதாரியான இவர் சவுதி அரேபியாவில் வேலை பாா்த்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பிறகு திருச்சியில் வேலை தேடி வந்தார். இந்தநிலையில் வீட்டில் இருந்த படியே வேலை செய்து ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று ஒரு விளம்பரம் முகநூல் பக்கத்தில் வந்துள்ளது. இதை பார்த்த சுவாமிநாதன், அதில் குறிப்பிட்ட எண்ணை வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அந்த எண்ணில் இருந்து ஒரு 'லிங்க்' வந்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்து, பயனாளர் குறியீடு, பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே சென்றுள்ளார். பின்னர், அவருக்கு வழங்கப்பட்ட கணக்கில் ரூ.200 ரீசார்ஜ் (முதலீடு) செய்துள்ளார். சில மணி நேரங்களில் அவருடைய வங்கி கணக்குக்கு ரூ.400 வந்துள்ளது. பணம் இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சியில், உற்சாகமான சுவாமிநாதன் தொடர்ந்து பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். இவர் பணம் செலுத்த, செலுத்த அதற்கான கமிஷன் தொகை விவரமும், அந்த தொகை உங்கள் வங்கி கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்றும் ஆங்கிலத்தில் அவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால், கமிஷன் விரைவில் வந்து விடும் என்ற நம்பிக்கையில் அவர், 12 நாட்களில் ரூ.9 லட்சத்து 33 ஆயிரத்து 216 வரை முதலீடு செய்துள்ளார்.
ஆனால் குறுஞ்செய்தி வந்ததே தவிர அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்தி படி கமிஷன் தொகை வரவில்லை. பின்புதான் அவருக்கு, தான் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சுவாமிநாதன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக சைபர்கிரைம் போலீசார் கூறும் போது, இவ்வாறு வேலை தேடும் நபர்களை பகுதி நேர வேலை, வீட்டிலிருந்து வேலை என கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு ஆன்-லைன் மோசடி கும்பல் தங்களின் வலையில் வீழ்த்தி லட்சக்கணக்கில் பணம் பறித்து வருகிறார்கள். இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்