திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பா.ஜனதா இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பேசும்போது, இளைஞரணி கடுமையாக உழைக்க வேண்டும். உங்களது கவனம் கட்சி வளர்ச்சியில் மட்டுமே இருக்க வேண்டும் என்றார்.
சிறப்பு விருந்தினராக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது.. "ஆன்லைன் விளையாட்டை கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் என்பதே எங்களது கருத்து. கவர்னர் எதற்காக ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தினரை சந்தித்தார் என்பது எங்களுக்கு தெரியாது. உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க உள்ளனர் என தகவல் வெளிவருகிறது. சமீபத்தில் கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனால் நாங்கள் காலம் காலமாக கூறுவது போல் தி.மு.க. ஒரு குடும்ப ஆட்சி என்பது தெரிய வருகிறது. விரைவில் தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை ஐ.டி. பிரிவு நிர்மல் குமார் தலைமையில், ஆதாரத்தோடு நாங்கள் வெளிக்கொண்டு வர உள்ளோம். தேசத்தை நேசிக்கும் அனைவருக்கும் காவி சொந்தம். காவி என்பது எந்த கட்சிக்கும் சொந்தமானது அல்ல என்பது என் கருத்து. மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்ட பாதை சேதம் அடைந்தி்ருப்பது குறித்து தி.மு.க.விடம் கேட்டால், அது தவறு என ஏன் தி.மு.க. ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அதை நாங்கள் திருத்தி கொள்கிறோம் என ஏன் சொல்ல மறுக்கின்றனர்.
புயல் நேரங்களில் கண்டிப்பாக விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து அதிக புயல்கள் ஏற்படுகிறது. பேரிடர் மேலாண்மைக்கு தமிழக அரசு தனி அங்கீகாரம் கொடுத்து பேரிடர் பாதிப்புகளை கண்காணிக்க தனியாக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். திருச்சியில் தி.மு.க. பிரமுகர் ஒருவர் மதுபான கேளிக்கை நடன விடுதி தொடங்கி அதில் பெண்களுக்கு இலவசம் என்று விளம்பரம் படுத்தி வருகிறார். இதை பற்றி நான் பேசுவதற்கே வெட்கப்படுகிறேன். படிப்படியாக மதுவை ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் 20 சதவீத மது விலக்கை கொண்டு வாருங்கள். அப்போது முதல்-அமைச்சரை நான் பாராட்டுவேன். சூர்யா சிவாவிற்கு அரசியலை விசாலமாக பார்க்கும் பார்வை இல்லை. அதனால் அவர் கட்சியை விட்டு விலகினார்.
லாலு பிரசாத் ஊழல்வாதி. ஆனாலும் அவர் திறமை வாய்ந்த அரசியல் தலைவர். அவரது மனைவி முதல் மந்திரி, மகன் துணை முதல்-மந்திரி என குடும்பத்தினரே பதவிகளை ஆக்கிரமித்தனர். ஒருவருடைய அரசியல் வாழ்க்கை மக்கள் நலம் சார்ந்து இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அரசியல் வாழ்க்கை பூஜ்ஜியம் ஆகிவிடும். இதற்கு லாலு பிரசாத் உதாரணமாகிவிட்டார். தமிழகத்திற்கும் இது பொருந்தும்” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்