திருச்சி மத்திய மண்டலத்தில் மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 65 வட்டார மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. தடையில்லாமல் ஆக்சிஜன் விநியோகம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை குறைந்து கொண்டே வருகிறது. தற்போது தினசரி கொரோனா தொற்று 1800 என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வந்தால் அதை எதிர் கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக படுக்கைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 43,902 ஆக்சிஜன் படுக்கைகள், 27,343 ஆக்சிஜன் அல்லாத படுக்கைகள், 9088 ஐசியூ படுக்கைகள் என்று மொத்தம் 80 ஆயிரம் படுக்கைகள் உள்ளது. இதைத்தவிர்த்து கோவிட் கேர் மையங்களில் 55,009 படுக்கைகளும் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.




கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஆக்சிஜன் படுக்கையின் தேவை அதிகரித்த நிலையில் படுக்கையின் தேவையும் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டார மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி பொதுப்பணித்துறையின் மருத்துவ சேவைகள் பிரிவு மூலம் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 319 வட்டார மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கப்பட்டது. இதில் குறிப்பாக மத்திய மண்டலத்தில் உள்ள 65 மருத்துமனைகளில் ஆக்சிஜன் வசதியும் கூடிய படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் திருச்சியில் 11, தஞ்சாவூரில் 14, திருவாரூரில் 8, புதுக்கோட்டையில் 14, அரியலூரில் 3, பெரம்பலூரில் 4, மயிலாடுதுறையில் 5, நாகையில் 6 என்று மொத்தம் 65 வட்டார மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.




திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, மண்ணச்சநல்லூர், தொட்டியம், துறையூர் உள்ளிட்ட 11 மருத்துவமனைகளில் 904 படுக்கை, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுபள்ளி, திருவிடைமருதூர், அதிகராம்பட்டினர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட 14 மருத்துமனைகளில் 1463 படுக்கைகள், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம், நீடாமங்கலம் உள்ளிட்ட 8 மருத்துவமனைகளில் 732 படுக்கைகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அன்னவாசல், அறந்தாங்கி உள்ளிட்ட 14 மருத்துவமனைகளில் 950 படுக்கைகள், அரியலூரில் ஜெயங்கொண்டம், செந்துறை, உடையார்பாளையம் மருத்துவமனைகளில் 278 படுக்கைகள், பெரம்பலூர் மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம், வேப்பூர் உள்ளிட்ட 4 மருத்துவமனைகளில் 669 படுக்கைகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், சீர்காழி உள்ளிட்ட 5 மருத்துவமனைகளில் 100 படுக்கைகள், நாகை மாவட்டத்தில் நாகூர், பொறையாறு உள்ளிட்ட 6 மருத்துவனைகளில் 243 படுக்கைகள் என்று மொத்தம் 6,289 படுக்கைள் தயார் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு திரவ ஆக்சிஜன் வழங்கும் பணிக்கான நடைமுறைகளை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தொடங்கியுள்ளது. நேரடியாக இந்த மருத்துவமனைகளுக்கு சென்று ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.