தமிழகத்தில் கொரோனா முதல் அலையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்த சூழ்நிலையில் இவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. இதன்படி தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியது.


குறிப்பாக முன்களப்பணியாளர், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என முன்னுரிமை அளிக்கபட்டது. பின்பு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அரசு அறிவித்தது, மேலும் கட்டுமான தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே சென்று அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, தடுப்பூசி செலுத்தும்  திட்டத்தை மாநில அரசு அறிவித்திருந்தது. பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, இந்த திட்டம் கிடப்பில் போடபட்டது, தற்போது மீண்டும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதன்படி தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று  குறைந்து கொண்டே வருகிறது. 20-ஆம் தேதி வரை 2 கோடியே 57 லட்சத்தில் 71 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதார பணியாளர்கள் 8.77 லட்சம் பேர். முன் கள பணியாளர்கள் 1.16 கோடி பேர், 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 1.11 கோடி பேர், 45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 83 லட்சம் பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 42 லட்சம் பேர் ஆகும்.




இதைத்தவிர்த்து செய்தித்தாள்கள் விநியோகம் செய்பவர்கள், பால் விநியோகிப்பவர்கள், தெருவோர வியாபாரிகள், மருந்தகங்கள் மற்றும் மளிகை கடைகளின் பணியாளர்கள், ஆட்டோ, கார், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், மின்துறை பணியாளர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், அனைத்து அரசு பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், அத்தியாவசியப் பணிகளுக்கான தொழிற்சாலைகள் மற்றும் மின்னணு வர்த்தகப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசியர்கள், மாநில போக்குவரத்து ஊழியர்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து பணியாளர்கள் மற்றும் மாநில பிற துறைகளின் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.




இந்த உத்தரவின்பிடி கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொழிலாளர் நலத்துறை தொடங்கி உள்ளது. இதன்படி மத்திய மண்டலத்தில் மட்டும் 29, 681 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதன்படி மத்திய மண்டலத்தில் புதிதாக பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும்  கணக்கிட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொழிலாளர் நல வாரியம் தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா 3 அலையில் இருந்து  மக்களை முழுமையாக பாதுகாக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆகையால் கட்டுமானத் தொழிலாளர்கள் எந்தவிதமான ஒரு அச்சமுமின்றி தானாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவேண்டும், குறிப்பாக அரசு கூறிய விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என தொழிலாளர் நல வாரிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.