திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்களது  உத்தரவின்படி, வருகின்ற"தீபாவளி" பண்டிகையை முன்னிட்டு, கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்புக்காக தேவையான காவல் அதிகாரிகளை நியமித்தும், கண்காணிப்பு கோபுரங்கள், CCTV கேமராக்கள், Dome கேமரா மற்றும் பொது விளம்பரங்கள் மூலமாக குற்றசம்பவங்கள் தடுக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் பண்டிகையை பொதுமக்கள் நல்ல முறையில் கொண்டாடவேண்டி முன்னேற்பாடுகள் பணிகள்  செய்யப்பட்டுள்ளது.


மேலும்  திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு நிலையத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...திருச்சி மாநகர பகுதிகளில் இளகுரக மற்றும் கனரக வாகனங்கள் பகல் நேரங்களில் சரக்குகள் ஏற்றுவது மற்றும் இறக்குவதை தவிர்த்து, இரவு 11.00 மணிக்கு மேல் செய்து கொள்ளுமாறும், தற்காலிக சாலையோர கடைகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து முறைப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


தற்காலிக காவல் உதவி மையம்- NSCB Temporary Police Out-Post..


பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அவர்கள் தங்களது உடைமைகளையும், குழந்தைகளையும் கவனமாக பார்த்து கொள்ளவும், அசம்பாவிதங்கள் அல்லது சந்தேகப்படும் படியான நபர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கவும், அது சம்மந்தமாக புகார் கொடுக்கவும், NSCB ரோடு தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையம் (Temporary Police Out-Post) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையம் (Public Address System) மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) அமைக்கப்பட்டு காவல் அலுவலர்கள்  மூலம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணித்து எவ்வித குற்றச் சம்பவம் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




கண்காணிப்பு கோபுரங்கள்..


குற்ற நடத்தை உடையவர்களை கண்காணிக்க 7 கண்காணிப்பு கோபுரங்கள் (Watch towers) 1. NSCB ரோடு பெரியகடைவீதி சந்திப்பு, 2. மலைகோட்டை வாசல், 3. மெயின்கார்டு கேட் ,4. நந்திகோயில் தெரு சந்திப்பு, 5.  சிங்காரதோப்பு பூம்புகார் ஜங்சன் அருகில், 6.  பெரியகடைவீதி கரீம்ஸ்டோர் அருகில், 7.  பெரியகடை வீதி ஆகிய 7 இடங்களில் நிறுவப்பட்டு பைனாகுலர்(Binocular) மூலம் கண்காணிக்க காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.


விரைவு சுழல் கேமராக்கள் மற்றும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள்:


குற்ற நடத்தைக்காரர்களை கண்காணிக்க தெப்பக்குளம் NSCB ரோடு புறக்ககாவல் நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் அதிநவீன சுழலும் Dome கேமராக்கள் இரண்டும், காந்திமார்க்கெட் ஆர்ச், பெரியகடை வீதி, சூப்பர் பஜார், ஜாபர்ஷா தெரு, மதுரை ரோடு, நந்திகோயில் தெரு, W.B ரோடு, NSCB ரோடு, சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 186 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்ற நடத்தைகாரர்களை கண்காணிக்க NSCB ரோடு ரகுநாத் சந்திப்பில் மானிட்டர்கள் அமைக்கப்பட்டு அதை இயக்குவதற்கு தனித்தனியே காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீபாவளி பண்டிகையின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகழா வண்ணம் திருச்சி மாநகரில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மூலமாக நாள் முழுவதும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.




பாதுகாப்பு அலுவலர்களாக  நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள்  விபரம்:


1) சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு:


கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பண்டிகை கால பாதுகாப்பு பணிக்காக 1 காவல் உதவி ஆணையர், 4 காவல் ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள், 48 காவல் ஆளிநர்களும் மற்றும் 30 ஊர்க்காவல் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


2) போக்குவரத்து ஒழுங்கு பாதுகாப்பு :


கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆணையர் தலைமையில், 1 காவல் ஆய்வாளர், 4 சார்பு ஆய்வாளர்கள், 20 காவல் ஆளிநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


3) வாகன நிறுத்துமிடங்கள்:


இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகம் பின்புறமுள்ள பனானா லீப் அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி மைதானம் மற்றும் கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பார்க்கிங் மைதானம் போன்ற இடங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


மேலும், பொதுமக்கள் முன்பின் தெரியாதவர்களிடம் தங்களது ஒப்படைக்கவேண்டாம் என்றும், சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் அருகில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும், காவலர் என்று கூறிக்கொண்டு தங்கள் நகைகளை பத்திரமாக பொட்டலத்தில் மடித்து தருகிறேன் என்று கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேற்கண்ட பாதுகாப்பு பணிகளுக்காக திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் மேலான உத்தரவின்படி, திருச்சி மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் திரு.அன்பு அவர்களின் நேரடி கண்காணிப்பில் சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளுக்காக மொத்தம் 115 காவல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.