நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் - வைகோ கண்டனம்

மனிதநேயத்தையும், சமூக ஒற்றுமையையும் பேணிக் காக்க விரும்பும் ஒவ்வொருவரையும் இச்செயல் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

Continues below advertisement

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், மாரியப்பன் ஆகிய இரு பட்டியலின இளைஞர்களை அப்பகுதி வழியாக வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் பெய்து, தாக்கி, மிரட்டிப் பணம் மற்றும் கைபேசிகளைப் பறித்துச் சென்றதாகவும் தகவல்கள் வருகின்றன. இச்செயல் மன்னிக்கவே முடியாத கடும் கண்டனத்திற்கு உரியதாகும். குற்றவாளிகள் ஆறு பேரை காவல்துறை உடனடியாக கைது செய்துள்ளது. இக்குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பும், கடமையும் காவல்துறைக்கு உள்ளது. ஒரு சிலரின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் சமூகங்களுக்கிடையே வளர்ந்து வரும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளது.

Continues below advertisement

மனிதநேயத்தையும், சமூக ஒற்றுமையையும் பேணிக் காக்க விரும்பும் ஒவ்வொருவரையும் இச்செயல் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இதுபோன்ற சமூக விரோத சக்திகளின் செயல்களை முளையிலேயே கிள்ளி எறிந்து, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்திட தொடர்ந்து விழிப்பாக இருந்து கண்காணித்திட வேண்டுமென மறுமலர்ச்சி திமுக சார்பில் வலியுறுத்துகிறேன் என்று வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

நெல்லை  மாநகரில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு கடந்த 30ஆம் தேதி மாலை வேளையில் அப்பகுதியைச் சேர்ந்த மனோஜ் மற்றும் மாரியப்பன் ஆகிய இரண்டு இளைஞர்களும் குளிக்க சென்றபோது அப்பகுதியில் மது அருந்திக் கொண்டும், கஞ்சா அடித்துக் கொண்டும் இருந்த கும்பல் ஒன்று அந்த இரண்டு இளைஞர்களையும் வழிமறித்து தாக்கியதோடு அவர்கள் இருவரின் ஜாதியை கேட்டு கொடூரமான முறையில் அந்த கும்பல் தாக்கியதாக சொல்லப்பட்டது. குறிப்பாக கையில் வைத்திருந்த வாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதுடன் இரண்டு பேரையும் நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்ததாகவும் சொல்லப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடையதாக சொல்லப்படும்  பொன்மணி(22),  நல்லமுத்து(21), ஆயிரம்(19), ராமர்(22), சிவா(22), லட்சுமணன்(20) ஆகிய ஆறு பேரையும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola