பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 58), எலக்ட்ரீசியன். இவருடைய வீட்டிற்கு கடந்த 8-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் வந்த 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் கதவின் உள்தாழ்ப்பாளை உடைத்து கொண்டு, வீட்டிற்குள் புகுந்தது. பின்னர் அவர்கள் தரைத்தளத்தில் தூங்கிக்கொண்டிருந்த பாண்டியனை இரும்பு கம்பியால் தாக்கி நகை, பணம் கேட்டு மிரட்டினர். இந்த சத்தத்தை கேட்டு மாடியில் தூங்கிக்கொண்டிருந்த அவருடைய மகள் ரம்யா (32) எழுந்து கீழே வந்தார். அப்போது முகமூடி கும்பல், அவர் அணிந்திருந்த 3 பவுன் தாலி சங்கிலி, ¾ பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்தனர். பின்னர் வீட்டில் பணம் ஏதும் இல்லாததால் கார் சாவியை பறித்து விட்டு வீட்டின் கதவை வெளிப்புறமாக தாழ்பாளிட்டு, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை எடுத்துக்கொண்டு அதில் தப்பி சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் காவல்துறை  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கும்பலை பிடிக்க மாவட்ட காவல் சூப்பிரண்டு மணி உத்தரவின் பேரில் 4 காவல்துறை அதிகாரிகள் கொண்ட  தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

 



 

மேலும்  முகமூடி கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். முகமூடி கும்பல் தப்பி சென்ற கார் சென்னை ஆர்.கே.நகரில் நிற்பதும், இந்த கொள்ளை சம்பவத்தில் மொத்தம் 9 பேர் கூட்டாக ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் நேற்று அதிகாலை தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகம்படும்படியாக காரில் வந்து கொண்டிருந்த 5 பேரை தனிப்படை காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், ராம்குமார் ஆகியோர் இருவரையும்  பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது தீவிர விசாரணையில் அவர்கள் பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு சமத்துவபுரத்தை சேர்ந்த சுப்ரமணியன் (48), சிவகங்கை மாவட்டம் வேளாங்குளம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த கருப்புசாமி மகன் சூர்யா (23), வேளாங்குளத்தை சேர்ந்த சோலைமுத்து மகன் ரஞ்சித் (25), மதுரை மாவட்டம் வரிச்சூர் அருகே உரங்கன்பட்டியை சேர்ந்த போஸ் மகன் அழகர்பாண்டியன் (32), சென்னை பெருங்குடி அம்பேத்கர் புரட்சி நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் பிரசாந்த் (26) என்பது தெரியவந்தது.

 



 

இதனை தொடர்ந்து இவர்கள்  5 பேரும் எலக்ட்ரீசியன் பாண்டியன் வீட்டில் நகை, காரை கொள்ளையடித்து சென்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து எலக்ட்ரீசியன் வீட்டில் கொள்ளையடித்த நகை, காரை காவல்துறை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக மருத்துவமனை பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு  வேனில் ஏற்றி நேற்று காலை 11.30 மணியளவில் அழைத்து சென்றனர். அப்போது மருத்துவமனைக்குள் பரிசோதனைக்காக அழைத்து சென்ற போது பிரசாந்த் என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை கீழே தள்ளி விட்டு தப்பி சென்றார். கைதி தப்பி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுப்ரமணியன், சூர்யா, ரஞ்சித், அழகர் பாண்டியனை  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களையும் பிடிக்க தனிப்படை காவல்துரையினர் விரைந்துள்ளனர்.