பெரம்பலூர் மாவட்டம், வி.களத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வெங்கடேசன் 44, தீபா 42 ஆகிய இருவருக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்தது. கடந்தாண்டு நவ., 15ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து, 18ம் தேதி வெங்கடேசன் மனைவி காயத்ரி, தீபா கணவர் பாலமுருகன் புகாரின்படி, பெரம்பலுார், வி.களத்துார் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடினர். கோவையில் நின்ற காரை 30ம் தேதி வி.களத்துார் போலீசார் பறிமுதல் செய்து, ரத்தக்கரையுடன் 1 அடி சுத்தியல், கத்தி, தீபாவின் தாலி குண்டு, கொலுசு, ஏ.டி.எம்., கார்டு, வெங்கடேசனின் இரண்டு செல்போனை கண்டெடுத்தனர். வெங்கடேசனின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்ட கோவை மதுக்கரை காந்தி நகரை சேர்ந்த பாலியல் புரோக்கர் மோகன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து, கடந்த 8ம் தேதி சென்னையில் பதுங்கி இருந்த வெங்கடேசனை தனிப்படைபோலீசார் கைது செய்தனர்.




கைது செய்யப்பட்ட ஆசிரியர் வெங்கடேசன் அளித்த வாக்கு மூலம் என்று போலீசார் தகவல்..


எங்கள் இருவருக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்து வந்தது. இருவரும் கடந்த தனித்தனியாக வெளியில் வந்து அயன்பேரையூர் கைகாட்டி அருகே சந்தித்தோம். இதனை அடுத்து தீபாவை காரில் அழைத்துச் சென்ற வெங்கடேசன், முருக்கன் குடி வனப்பகுதி அழைத்துச் சென்று  தனிமையில் இருந்துள்ளார். அதன் பின்னர், வெங்கடேஷனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் தொடர்பை விடுமாறும் கடனாக கொடுத்த லட்சக்கணக்கான பணத்தை திருப்பி தருமாறும் தீபா வெங்கடேசனிடம் வற்புறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேசன் காரில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து வந்து தீபாவின் தலையில் ஓங்கி பலமாக அடித்துள்ளார். வலியில் துடித்த தீபாவை ஈவு இரக்கமில்லாமல் தொடர்ந்து சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்தார். இதன் பின்னர், சடலத்தை காரின் டிக்கியில் ஏற்றிய வெங்கடேசன், எங்காவது கொண்டு சென்று எரித்து விட முடிவு செய்தார். ஆனால், எப்படி எங்கு எரிப்பது என்று தெரியாத வெங்கடேசன் சடலத்துடன் காரில் திருச்சி நோக்கி சென்றார். கார் திருச்சியை கடந்ததும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தை தேடினார்.


அப்போது, புதுக்கோட்டை அருகே சாலையோரத்தில் குப்பைகள் எரிந்த பின் புகை வந்த நிலையில் இருந்ததை பார்த்த வெங்கடேசன் காரை நிறுத்தி, தீபாவின் சடலத்தை அங்கு போட்டு ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்து விட்டு, கோவைக்கு தப்பி சென்றார். போலீஸ் தன்னைத் தேடுவதை அறிந்த வெங்கடேசன் அங்கிருந்து தேனி, கேரளா உள்ளிட்ட ஊர்களில் சுற்றித்திரிந்தார்.




இதைத்தொடர்ந்து, வெங்கடேசன் சென்னை காஞ்சிபுரத்தில் இறுதியாக பதுங்கி இருந்தார். வெங்கடேசனின் மொபைல் போனை நோட்டமிட்ட வி.களத்தூர் தனிப்படை போலீசார் கடந்த 8ம் தேதி அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, வேப்பந்தட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வெங்கடேசனை வி.களத்தூர் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பர்வதராஜ் ஆறுமுகம் வெங்கடேசனை வரும் 23ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர், வெங்கடேசனை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.