தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியானது, தை மாதம் முதல் தொடர்ந்து 3 மாதங்களுக்கு பல்வேறு பகுதிகள் தொடர்ந்து நடைபெறும். அந்த வகையில் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 750க்கு மேற்பட்ட காளைகளும், 150 மாடுபிடிவீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியில் காளைகள் முட்டியதில் 45 வீரர்கள் காயமடைந்தனர். தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு போட்டி. இந்த வீர விளையாட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவ்டடம் சமயபுரம் அருகே தெற்கு இருங்களூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. காளைகளை அடக்குவதற்காக 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக பெயர்களை பதிவு செய்து கொண்ட மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.


அதேபோல் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஊராட்சி தலைவர் வின்சென்ட் தலைமை தாங்கினார். லால்குடி ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் மற்றும் மண்ணச்சநல்லூர் தாசில்தார் அருள்ஜோதி ஆகியோர் கொடிஅசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். மேலும் ஜல்லிக்கட்டில் சிறப்பு விருந்தினராக மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கலந்து கொண்டர். இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினா்.




மேலும், பல காளைகள் வீரர்களுக்கு பிடிகொடுக்காமல் துள்ளிக்குதித்து ஓடின. சில காளைகள் களத்தில் சிறிது நேரம் நின்று வீரர்களுக்கு போக்கு காட்டியது. இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் காளைகளை அடக்கியபோது வீரர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள், காளைகளின் உரிமையாளர்கள் உள்பட 45 பேர் காளை முட்டியதில் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு உள்ள மருத்துவ குழுவினர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதில் சிலர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை காண மண்ணச்சநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். வாடி வாசலின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர்கள் மற்றும் வாகனங்களில் ஏறி நின்று அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து பார்த்தனர். லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் மேற்பார்வையில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 150 -க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.