தமிழ்நாட்டில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கும் வகையில் மாநில காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள், தலைமறைவாக உள்ள ரவுடிகளை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆபரேஷன் மின்னல் வேட்டையை காவல்துறையினர் தொடங்கி உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்தார். இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


இதுதொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு எதிரான மின்னல் வேட்டையில் முதல் 24 மணிநேரத்தில் 133 ரவுடிகள் சுற்றி வளைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பல ஆண்டுகள் பிடிபடாமல் இருந்த பிரபல ரவுடிகளும் அடங்குவர். சிலர் பிற மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து அடத்த 24 மணிநேரத்தில் நடந்த வேட்டையில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த 48 மணிநேரத்தில் நடந்த மின்னல் வேட்டையில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகள் ஆவார்கள். 110 பேர் மீது பிடி ஆணைகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் 331 பேரும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.


மேலும் பிடிபட்ட மீதமுள்ள 979 ரவுடிகள் காவல் நிலைய பதிவேடு குற்றவாளிகள். இவர்கள் மீது நன்னடத்தை காவல் துறையினர் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது. அதனை மீறும் பட்சத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டு 6 மாதகாலம் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனும் எச்சரிக்கையையும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் இந்த நடவடிக்கையின்போது ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் தற்போது ஆபரேஷன் ரவுடி வேட்டை 2வது நாளாக நடந்துள்ளது. தொடர்ந்து இந்த போலீஸ் நடவடிக்கை தொடர உள்ளது. இதனை ஒவ்வொரு மாவட்ட எஸ்பிக்களும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் உள்ள ரவுடிகள் அச்சமடைந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். 




இதன் அடிப்படையில், திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்களை குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து திருச்சி மாநகர வடக்கு, தெற்கு, சரக உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அறிவுரை வழங்கினார். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் போலீசார் 'மின்னல் வேட்டை' என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள தொடங்கினர்.  இதில் திருச்சி மாநகரத்தில் 48 மணி நேரத்தில் பொது அமைதிக்கு கேடு விளைவிப்பவர்கள், கொலை குற்றவாளிகள், தொடர் குற்றவாளிகள் என பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 82 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில், நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறிய 56 பேரும், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 20 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 6 பேரும் என மொத்தம் 82 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சட்ட ரீதியான கடுமையான நடவடிகைகள் எடுக்கபடும் என காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர்.