பெரம்பலூர் மாவட்டத்தில்  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் விவசாயி ராமராஜ் பேசுகையில், "மக்காக்சோளத்தை தனியார் கொள்முதல் செய்வதில் எடை மோசடி நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும். பருத்திக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை முறையாக நடத்தினால் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கும், என்றார். மேலும் 100 நாள் வேலை தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். பலருக்கு அவர்களது வங்கிக்கணக்கில் ஊதியம் செலுத்தப்படுவதில்லை. இதனை சரி செய்ய வேண்டும். மாவட்டத்தில் அதிக சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், பருத்திக்கு சிறப்பு உதவித்தொகை பெற்றுத்தர வேண்டும். வேளாண் கொள்முதல் கமிட்டி முறையாக செயல்பட வேண்டும்.




மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ளது போல் பெரம்பலூர் மாவட்டத்திலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு 1 ஆண்டிற்குள் திருப்பி செலுத்தும் வட்டியில்லா கடனாக வேளாண் பயிர்க்கடன் வழங்க வேண்டும். 70 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு கடன் வழங்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் 60 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கும் ஓய்வூதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். விவசாயி சிவசாமி பேசுகையில், தொண்டப்பாடி, பாலையூர் கிராமங்களில் கதிரடிக்கும் உலர் களம் அமைத்து தர வேண்டும். பாலையூர் கிராமத்தில் வேத நதியில் படித்துறை கட்டித்தர வேண்டும். கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் மறுபகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு விவசாயிகள் சென்றுவர பாதை அமைத்து தர வேண்டும். மழைக்கு முன்பாக ஏரி, குளங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 




பெரம்பலூர் மாவட்டத்தில் உழவர் குழுக்கள் அமைத்து 39 வரத்து வாய்க்கால்கள் ரூ.4 கோடி மதிப்பில் தூர் வாரும் பணிகள் நடைபெறவுள்ளது எனவும், விவசாயிகள் அதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டுமென கலெக்டர் கற்பகம் கேட்டுக்கொண்டார். மேலும் கிரெயின்ஸ் இணையதளத்தில் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய முழு விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டுமென கலெக்டர் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சங்கர்.எஸ்.நாராயணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, தோட்டக்கலை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண