திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 


கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,750 பேர் வரை ஒரே நாளில் தொற்றினால் பாதிக்கபட்டனர். பின்னர் போடப்பட்ட பொதுமுடக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று பரவலானது படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 


இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் மீண்டும் கடந்த 2 வார காலமாக தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிடும் கொரோனா பாதித்தவர்கள் பட்டியலில் திருச்சி மாவட்டம் 10ஆவது இடத்தில் உள்ளது. திருச்சி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 29.20 லட்சமாக இருக்கும் நிலையில், இதுவரை மாவட்டம் முழுவதும் உள்ள 10.25 லட்சம் பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுட 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களாக 20.93 லட்சம் பேர் உள்ள நிலையில் இதுவரை 7.50 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 




சதவிகித அடிப்படையில் திருச்சியில்  35.8 சதவிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது. ஆனால் இரண்டாவது தவனை தடுப்பூசியானது 1.84 லட்சம் பேர்கள் அதாவது 24.5 சதவீதம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால்  50 சதவீதத்திற்கு மேல் தடுப்பூசியை மக்கள் செலுத்திக்கொண்டால் மட்டுமே தொற்று பரவுவதை தடுக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.


மேலும் திருச்சி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் 50 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் பற்றாகுறை இருந்தது, ஆனால் தற்போது திருச்சி மாவட்டத்திற்கு தேவையான ஆக்சிஜன் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது, ஆகையால் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு என்று 100 படுக்கை வசதியுடன்  சிறப்பு வார்டுகளும் தயார் நிலையில் உள்ளது.




மேலும் திருச்சி நகரம், ஊரக பகுதிகளில் தொற்று பரவாமல் தடுக்க குழு அமைக்கபட்டுள்ளது, தினந்தோறும் மக்களின் இல்லத்திற்கே சென்று தொற்றின் அறிகுறிகள் ஏதாவது உள்ளதா என கண்டறிவார்கள் இதனால் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். மேலும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் முகக் கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல், அலட்சியப் போக்கில் அதிகளவில் கூட்டமாக கூடுவதை பார்க்க முடிகிறது.


கடந்த மூன்று வாரங்களாக திருச்சியில்  கொரோனா தொற்று பாதித்தவர்களின்  எண்ணிக்கை 60 முதல் 70 என தினந்தோறும் வந்து கொண்டிருக்கிறது. தொற்றை  கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அரசு கூறிய விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும், தயங்காமல் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும், சிலர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கத்துடன் இருக்கிறார்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டும் தான் முற்றிலுமாக மூன்றாவது அலையில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.