திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியாபுரம் அடுத்த ஆங்கியம் கிராமத்தில் கடந்த 1ஆம் தேதி சிறுத்தை இருவரை தாக்கிய  சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் 2 குட்டிகளுடன் சிறுத்தை நடமாடுவது தெரியவந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே வனத்துறையினர் பொருத்திய கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்யப்பட்டு, உருவ அமைப்பின்படி அது ஆண் சிறுத்தை எனவும், கேமரா பதிவுகளின்படி , சிறுத்தை ஆங்கியம் காட்டிலிருந்து வெளியேறி  கொல்லிமலை வனப்பகுதியில் நுழைந்து விட்டதாக வனத்துறை அறிவித்ததையடுத்து. ஆங்கியம் பொது மக்கள் நிம்மதியடைந்தனர். பின்பு சிறுத்தையின் கால்தடங்களை பரிசோனைக்கு உட்படுத்திய பொழுது, அது பெண் சிறுத்தை என தெரியவந்தது. கடந்த சில தினங்களாக இரவு வேளைகளிலும் ,வயல்வெளிகளிலும் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்பதாக ஆங்கியம் பொதுமக்கள் புகார் எழுப்பினர். இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் ஆங்கியத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கமலி,இவர் தோட்டத்தில் அவரின் தாத்தாவிற்கு சாப்பாடு கொடுக்க சென்ற போது இரண்டு குட்டிகளுடன் சிறுத்தை நடமாடுவதை பார்த்து அச்சத்துடன் ஊருக்குள் வந்து கூறியுள்ளார்.




விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஆங்கியம் பொதுமக்கள் இதனால் அச்சத்திலுள்ளனர், கூலி வேலையை நம்பியுள்ள தொழிலாளிகள், ஆடு, மாடுகளை வாழ்வாதாரமாக கொண்ட பொது மக்கள், விவசாயிகள் ஆகியோர் தோட்ட பகுதிகளுக்கு செல்ல அச்சமடைந்துள்ளதாகவும், சிறுவர்கள், குழந்தைகள் உயிர்பயத்துடன் உள்ளதாகவும், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய இன்று வனத்துறையினர் டிராப் கேமரா பொருத்தியுள்ளனர். மீண்டும் குட்டிகளுடன் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் கிராம மக்கள் அச்சமுடன்  உள்ளனர். மேலும் ஆங்கியம், அழகாபுரி, கோனேரிப்பட்டி, உள்ளிட்ட குன்றை சுற்றி உள்ள கிராம மக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.




இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி அதிகாலையில் ஆங்கியம் கிராமத்தின் எல்லையில் வைக்கப்பட்ட கேமராவில் ஊர் எல்லையை தாண்டி சிறுத்தை வெளியேறும் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை கொல்லி மலையின் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  இதனை அடுத்து கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.ஆனால் மீண்டும் மேலும் திருச்சி மாவட்டத்தில்  சிறுத்தை நடமாட்டம் இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை. மேலும் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்