தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாவட்டம் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது. விஜயநகர பேரரசு, ஆங்கிலேயர்கள், முகலாயர்கள், பல்லவர்கள் என அனைத்து ஆட்சியின் கீழும் திருச்சி இருந்துள்ளது. திருச்சியில் உள்ள உறையூர் சோழர்களின் தலைநகராக விளங்கி வந்துள்ளது. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் தான் திருச்சி மாநகருக்குள் ஓடும் உய்யகொண்டான் வாய்க்கால் கட்டப்பட்டது. திருச்சி மலைக்கோட்டையை சுற்றியுள்ள கோட்டை சுவர்கள், அரண்மனை, ராணிமங்கம்மாள் கொலுமண்டபம், மெயின்கார்டுகேட் நுழைவுவாயில் என திருச்சியின் முக்கிய பகுதிகளில் புராதன சின்னங்கள் நிறைந்து கிடக்கின்றன. ராணி மங்கம்மாள் கொலுமண்டபம் தற்போது அரசு அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருச்சிக்கு வரும்போதெல்லாம் இந்த புராதன சின்னங்களை காண தவறுவதில்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்சியில் மலைக்கோட்டைக்கு பின்புறமுள்ள பட்டவர்த்சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.4 கோடியில் புராதன பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1.27 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் புராதன பூங்காவில் காலங்காலமாக நகரின் துடிப்பான வரலாற்றை காட்டும் சுவரோவியங்கள் இடம் பெறுகின்றன. மேலும், இந்த பூங்காவில் ராஜராஜசோழன், கரிகால சோழன், ராணி மங்கம்மாள் ஆகியோரது சிலைகள் கம்பீர தோற்றத்துடன் நிறுவப்படுகிறது. இந்த சிலைகள் தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழகத்தால் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது

 



 

மேலும் இது தவிர, 2 போர் வீரர்களின் சிலைகளுடன், 2 குதிரைகளின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்திலேயே குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு பகுதி, பெரிய மூலிகை தோட்டம், கலாசார நிகழ்வுகளை நடத்தக்கூடிய ஒரு ஆம்பி தியேட்டர் உள்பட பல்வேறு அம்சங்களுடன் பூங்கா வடிவமைக்கப்படுகிறது. கார் `பார்க்கிங்' வசதி மற்றும் இருசக்கர வாகன `பார்க்கிங்' வசதி உள்ளிட்டவையும் கொண்டு வரப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இந்த பூங்கா கட்டுமான பணிகள் தொடங்கியது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் கொரோனா ஓய்ந்தபிறகு மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. பல்வேறு தாமதங்களுக்கு இடையே தற்போது பூங்காவில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. திருச்சியில் குழந்தைகளுடன் சென்று பொழுதுபோக்குவதற்கு முக்கொம்பு சுற்றுலாத்தலத்தை தவிர, வேறு சரியான இடம் இல்லை என்பது திருச்சி நகர மக்களின் ஆதங்கமாக உள்ளது. இந்தநிலையில் திருச்சியில் ரூ.4 கோடியில் கட்டப்பட்டுள்ள புராதன பூங்காவை விரைந்து திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.  பூங்கா திறக்கப்பட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சென்று கண்டுகளிக்கலாம். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு நமது முன்னோர்களின் வரலாறுகளையும், கலாசாரத்தையும் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். பழங்கால கட்டிடக்கலையை நினைவுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இந்த புராதன பூங்கா திருச்சியின் அடையாளங்களுள் ஒன்றான மலைக்கோட்டை அருகே அமைக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண