வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 நபர்களிடம்  டிஎன்ஏ பரிசோதனை செய்ய ரத்த மாதிரி எடுக்க வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 




 




புதுக்கோட்டை முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் 26ம் தேதி மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர் கவிதாராமு, காவல் துறை கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசாரும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர்.


அத்துடன், குடிநீர் தொட்டியில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. மேலும் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல், இறையூர் மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 46 பேர், பிற சமூகத்தை சேர்ந்த 49 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.


பிப்ரவரி மாதம்  வேங்கைவயல் கிராமம் அமைந்துள்ள முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், பயிற்சி காவலர் முரளிராஜா, மற்றும் முன்னாள் கவுன்சிலர் உள்பட 8 பேரிடம்,  சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வேங்கையவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர், மாவட்ட எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. புதுக்கோட்டை ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. 15 நாட்களில் அறிக்கை அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டது. அம்பேதகர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகுமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரக்கூடிய நிலையில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனடிப்படையில் குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி, வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் டிஎன்ஏ சோதனை எடுக்க அனுமதி வழங்க கோரி கடிதம் கொடுத்திருந்தார். இந்த கோரிக்கையை முன்னிட்டு இறையூர் மற்றும் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த 11 நபர்களிடம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனை செய்ய ரத்த மாதிரி எடுக்க வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.


கரூர்: ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்