திருச்சி மாநகராட்சியின் 28 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக ஆண்களுக்கு மேயர் ஆகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. திருச்சி மாவட்டம் பண்டைய காலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய உறையூரை தன்னகத்தே கொண்டுள்ள திருச்சி மாநகர் தமிழகத்தின் மையப் பகுதியாகவும் மாநிலத்தின் மற்ற பகுதிகள் அனைத்தையும் இணைக்கும் நகரமாக விளங்கி வருகிறது. உலக பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்காவல், புனித லூர்து அன்னை சர்ச், நத்தர்ஷா பள்ளிவாசல், என்ற சிறப்பு மிக்க சர்ச்சைகளையும், அகண்ட காவிரி, இரண்டாகப் பிரியும் முக்கொம்பு, கரிகால சோழன் கட்டப்பட்ட கல்லணை, உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்களை கொண்ட புகழ் பெற்ற நகரமாக விளங்குகிறது. இத்தனை சிறப்புக்குரிய பழம்பெரும் திருச்சி மாநகரம் ஆரம்ப காலகட்டத்தில் நகராட்சியாக இருந்தது. கால மாற்றத்திற்கேற்ப நகரம் விரிவாக்கம் மற்றும் மக்கள்தொகை அடிப்படையிலும் திருச்சி நகராட்சி கடந்த 1994 ஆம் ஆண்டு ஜூன்1 தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
அப்போது திருச்சியை சுற்றி இருந்த ஸ்ரீரங்கம், பொன்மலை நகராட்சிகள், அபிஷேகபுரம், அரியமங்கலம் பேரூராட்சிகள் ஆகியவை இணைக்கப்பட்டன. இப்போது திருச்சி மாநகராட்சியில் 167.23 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடன். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் 4 கோட்டங்கள் 65 வார்டுகள் என்று பரந்து விரிந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்சி மாநகராட்சியின் தலைமை நிர்வாக பதவியான மேயர் பதவி கடந்த 1996 உள்ளாட்சி தேர்தல் முதல் பொதுப்பிரிவு பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்தது. இதனால் 1996-2000 ஆண்டு வரை திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புனிதவள்ளி, 2001 ஆம் ஆண்டு பொறுப்பு மேயராக காங்கிரஸ் கட்சி எமிலி, 2001, 2006 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் சாருபாலா, 2010-2011ஆண்டு சுஜாதா ஆகியோர் பொறுப்பு வகித்தனர். 2011ஆம் ஆண்டில் மட்டும் அதிமுகவை சேர்ந்த ஜெயா மேயராக பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதில் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது இது முக்கிய அரசியல் கட்சியில் உள்ள நிர்வாகிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் மாநகராட்சியில் 28 ஆண்டுகள் பிறகு வரலாற்றில் முதன்முறையாக திருச்சி மாநகராட்சியில் ஆண்கள் மேயராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.