திருச்சி மாநகராட்சி கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அருகில் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக பலதட்டுகள் கொண்ட காற்று உலர்த்தி அமைப்பை உருவாக்கி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பேசியதாவது..  கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சி இல்லாததால் மக்கள் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபிறகு திருச்சிக்கு எந்த திட்டங்களை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வழங்கி வருகிறார். 1996-2001 முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது அரியமங்கலம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அனுமதி கேட்டோம். அவர் அனுமதி தந்ததால் தான் அரியமங்கலம், திருவெறும்பூர் பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டது. திருச்சி மாநகரில் 90 எம்.எல்.டி. தான் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. கருணாநிதி ஆட்சியில் தான் ரூ.220 கோடி மதிப்பில் கொள்ளிடத்தில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை கேட்டோம். இந்த திட்டம் முடிக்கப்பட்டு தற்போது திருச்சிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மிளகுபாறை பகுதியில் பல ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சினை இருந்து வந்தது. தற்போது அதற்கு தீர்வு காணும் வகையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒருநபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தர வேண்டும் என்ற இலக்கை கொண்டு செயல்பட்டு வருகிறோம். 




தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு முதற்கட்டமாக ரூ.380 கோடி நிதி ஒதுக்கினார். அடுத்தக்கட்டமாக ரூ.450 கோடிக்கு புதிய மார்க்கெட் வளாகம், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும். மேலும், காவிரி, கொள்ளிடம் கரைகளை பலப்படுத்த திருச்சி மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.240 கோடி தற்போது தரப்பட்டுள்ளது. புதிதாக பஞ்சப்பூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய இருக்கிறது. அதே பஞ்சப்பூரில் தான் முதலமைச்சர் அறிவித்த ஒலிம்பிக் விளையாட்டு திடல் 200 ஏக்கரில் அமைய உள்ளது என தெரிவித்தார்.




இதேபோல் திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 54, 55-க்குட்பட்ட பெரியமிளகுபாறை மற்றும் சின்னமிளகுபாறை ஆகிய பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக பொதுநிதியின் கீழ் (2021-22) ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் பெரியமிளகுபாறை அரசு இயன்முறை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், எம்.எல்.ஏ.க்கள் பழனியாண்டி, ஸ்டாலின்குமார், தி.மு.க. பகுதி செயலாளர் மோகன்தாஸ், கவுன்சிலர்கள் புஷ்பராஜ், ராமதாஸ், மஞ்சுளாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.




தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன் பிரதான் மந்திரி மட்சய சம்படா யோஜனா திட்டம் 2021-22-ன் கீழ் ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றில் 0.58 லட்சம் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 1.50 லட்சம் ஆக மொத்தம் 2.08 லட்சம் நாட்டு இன மீன் குஞ்சுகள் முறையே காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் இருப்பு செய்யப்பட்டது. இந்த திட்டமானது ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடவும், அழிந்து வரும் நாட்டின் மீன் இனங்களை பாதுகாத்திடவும் ஆறுகளில் நிலைத்த வளம் குன்றா மீன்வளத்தை நிலை நிறுத்தவும், ஆற்று மீன்பிடிப்பினை நம்பியுள்ள உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் இந்த திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.