பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடம் அனுமதி பெற்று நடத்திட வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ள தேதிக்கு 20 நாட்கள் முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது, ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடம், ஜல்லிக்கட்டு தொடர்பாக கிராம கணக்கு புத்தகத்தில் பதியப்பட்டுள்ள விவரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, அதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கடந்த ஆண்டு முதல், கொரோனா பெருந்தொற்று குறித்து கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளிலும் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமலும் மற்றும் பார்வையாளர்கள் கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகளுடன் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்தில் கொரோனா பெருந்தொற்று இல்லை என சான்று பெற்றிருப்பதுடன், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கான (இரண்டு தவணைகளும்) சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளை உரிமையாளர், உதவியாளர் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், முககவசம் அணிவதும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.




ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனுமதி கேட்கும் விழாக்குழுவினர் கீழ்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதன் விவரம் வருமாறு:


ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விண்ணப்பம். காப்பீடு செய்யப்பட்டதற்கான காப்பீடு நகல். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அதற்கு ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவினரே பொறுப்பு என்பதற்கான உத்தரவாத பத்திரம். இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடைபெற்றதற்கான அரசாணை நகல். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காளைகளின் எண்ணிக்கை. ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ள பதிவு செய்யப்பட்டுள்ள மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை. கடந்த ஆண்டு தங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடந்ததில், அசாம்பாவிதம் ஏதேனும் நடந்திருப்பின், அதற்கான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதற்கான நகல். கடந்த ஆண்டு தங்கள் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்ற காளைகளில், காயம் அடைந்த காளைகளின் எண்ணிக்கை மற்றும் விவரம் இருக்க வேண்டும்.




ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் தல வரைபடம். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படும் இடத்தின் மொத்தப்பரப்பளவு. காளைகள் ஓடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தின் பரப்பளவு. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் மொத்த இடத்தின் வரைபடம். ஜல்லிக்கட்டு களம் அமைத்திடும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்த கடித நகல். மேற்கண்ட ஆவணங்களை 3 நகல்களில் விண்ணப்பிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த அறிவிக்கை செய்யப்படாத கிராமம் எனில் இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடைபெற்றதற்கான ஆதாரம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்து அரசாணை பெறப்பட்ட பின்னரே ஜல்லிக்கட்டு நடத்த தொடர்புடைய குழுவினருக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பின்னரே ஜல்லிக்கட்டு தொடர்பான ஏற்பாடுகளை தொடர்புடைய குழுவினர் மேற்கொள்ள வேண்டும்.


ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்குபெறும் காளை உரிமையாளர், ஒரு உதவியாளர் மற்றும் காளை விவரங்களை நிகழ்ச்சிக்கு 7 நாட்களுக்கு முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாத நபர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை, அரசாணை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி எதுவும் பெறாமல் நடத்துபவர்கள் மீது போலீசார் மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.