திருச்சி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 படுக்கைகளுடன் டெங்கு வார்டு தயார் நிலையில் உள்ளதாக  மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் உள் நோயாளிகளாக 700க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தீவிர விபத்து சிகிச்சை பிரிவு, அவசர வார்டு, பிரசவ மற்றும் குழந்தைகள் வார்டு, எறும்பு பிரிவு, கண் நோய் பிரிவு, தீப்புண் வார்டு, உட்பட 16 வார்டுகள் உள்ளன. மேலும் ஒரே கட்டிடத்தில் இயங்கும் வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 16 நோய்களுக்கான வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் இதய அறுவை சிகிச்சை மருத்துவம், கிட்னி அறுவை சிகிச்சை மருத்துவம், குடல் (கேஸ்ட்ரோ) நோய்க்கான அறுவை சிகிச்சை மருத்துவம், ஆர்த்தோ அறுவை சிகிச்சை, ஆகியவை துவங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுநீரக பாதிப்பு டயாலிசிஸ் நோய்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.




இதற்கிடையில்  தலைமை செயலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பருவமழை காலம் துவங்க உள்ள நிலையில், பொது மக்களின் உயிருக்கும், உடமைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படகூடாது என்றார். மேலும் அதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது கொரோனா  இரண்டாவது அலையின்  தாக்கத்தை அரசு திறமையாக கையாண்டு குறைத்து வருகிறது. இதில் தற்போது மழைக்கால நோய் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதே அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் எப்எம் 2 ஆவது வார்டில் 30 படுக்கைகளுடன் கூடிய டெங்கு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது,  முற்றிலும்  தயாராக வைக்கப்பட்டுள்ளது என்றார்.




இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் வனிதா கூறுகையில் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தற்போது மழை காலம் துவங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக டெங்கு வார்டு ஏற்படுத்தப்பட்டு அதில் அனைத்து வசதிகளும் செய்து 30 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை அளிக்க கூடிய வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகரில், மாநகராட்சி ஊழியர் உடன் மருத்துவ குழுவினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எனவே திருச்சி மாநகர மாவட்ட பொது மக்கள் எவ்வித பயமுமின்றி,  மழைகாலத்தில் டெங்கு, மலேரியா, போன்ற நோய்கள் வருவது வழக்கமான ஒன்று தான் ஆகையால் மக்கள் அதை பற்றி அச்சம் படவேண்டிய அவசியமில்லை,திருச்சி மாநகராட்சியும், மருத்துவக் குழுவும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆகையால் உடலில் எந்தவிதமான ஒரு அறிகுறிகள் தென்பட்டாலும்  உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று நலமுடன் செல்லலாம் எனவும் தெரிவித்தார்.