கரூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் அரசுத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பல்வேறு பயனாளிகளுக்கு கடனுதவி வழங்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும், எத்தனை பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது, எத்தனை பேருக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது, நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  விரிவாக ஒவ்வொரு வங்கிவாரியாக ஆய்வு மேற்கொண்டார். 




எஸ்.வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற மாற்றுத்திறனாளிக்கு தாட்கோவின் தொழில்முனைவோர் திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுவதாக காந்திகிராமம் பாரத ஸ்டேட்வங்கியின் மூலம் உறுதியளிக்கப்பட்டு, அதனடிப்படையில் தாட்கோ மூலம் அரசின் மானிய நிதியுதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நேரத்தில் ஒரு வருடமாகியும் அந்த வங்கியின் மூலம்  கடனுதவி வழங்கப்படவில்லை. இதனால், தாட்கோ மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியம் அரசிற்கு திரும்ப செலுத்தப்பட்டுவிட்டது. மாற்றுத்திறனாளி என்றபோதும் ஒரு வருட காலம் முறையான காரணங்களை தெரிவிக்காமல் அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்தமால் வாடிக்கையாளர் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். 




அதுமட்டுமில்லாமல் கல்விக்கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும் கல்விக்கடனுதவி வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வரப்பெற்றதாக தெரிவித்த மாவட்ட ஆட்சித்தலைவர் இதுபோன்று அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்தாததாலும், வாடிக்கையாளர்களை கனிவாக நடத்தாமல் அலைக்கழித்ததாலும், கடந்த ஒரு வருடகாலமாக பல்வேறு அரசுத்துறைகளின் வங்கிக்கணக்குகளுக்கு முறையான வங்கி சேவைகள் வழங்கபடாததாலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு துறைகளின் சார்பில், பாரத ஸ்டேட் வங்கியில் வைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்குகளை ரத்து செய்து பிற பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.




இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் வங்கியாளர்கள் கூட்டத்திலும் விரிவான ஆய்வு செய்யப்பட்டு, அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்தாத வங்கிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். கடந்த மார்ச் மாத நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் சுமார் 300க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகளின், மூலம் சுமார் ரூ.50 கோடிக்கும் மேலான பணபரிவர்த்தனை நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இக்கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஈரோடு மண்டல உதவி பொதுமேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் பரமேஸ்குமார், மகளிர் திட்ட அலுவலர் வாணிஈஸ்வரி, மாவட்ட ஆட்சியரன் நேர்முக உதவியாளர்(கணக்குகள்) வேணுகோபால், கால்நடைபராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.




கூட்டத்திற்கு பிறகு கரூர் திண்டுக்கல் சாலையில் உள்ள எஸ்பிஐ கிளை மேலாளர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் இத்தகைய அதிரடி நடவடிக்கையால் பல்வேறு வங்கிகள் ஆட்டம் கண்டு போயுள்ளனர். அவசர அவசரமாக ஒரு சில வங்கிகள் லோன் மேளா நடத்தப்பட்டது. யாரும் எதிர்பாராத மாவட்ட ஆட்சித்தலைவரின் செயலால் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த வங்கியின் மேலாளர்கள் சற்று தலை சுற்றி போய்விட்டனர்.  பாமர மக்களுக்கு தொழில் கடன் வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவரின் அதிரடி உத்தரவை பல்வேறு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.