Trichy Airport New Terminal: திருச்சி விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ள புதிய பயணிகள் முனையத்தில் பயணிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


புதிய முனையத்தில் பயணிகளுக்கு வரவேற்பு:


திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பயணிகள் முனையம், இன்று காலை முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து வந்த இண்டிகோ விமானம், முதல் விமானமாக அந்த முனையத்தில் தரையிறங்கியது. அபோது, விமானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த முனையத்தை, பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ஜனவரியில் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






பயணிகளை வரவேற்ற விமான நிலைய ஊழியர்கள்:


புதிய முனையம் வாயிலாக பயணம் மேற்கொள்ள வந்த பயணிகளை, விமான நிலைய ஊழியர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.






புதிய முனையத்தில் உள்ள வசதிகள்:


திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும், ரூ.1,112 கோடி மதிப்பிலான திட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு மோடி தொடங்கி வைத்தார். அதன்படி பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில்,  75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ஆண்டுக்கு சுமார் 44.50 லட்சம் பயணிகளை கையாள முடியும். ஒரு மணி நேரத்திற்கு 3 ஆயிரத்து 480 பயணிகளை கையாள முடியும். புதிய முனையத்தில் 104 இமிகிரேசன் கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.


புதிய முனையத்தில் 10 ஏரோ பிரிட்ஜ்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தற்போது 5 ஏரோ பிரிட்ஜகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மீதமுள்ள 5 ஏரோ பிட்ஜ்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளன.  திருச்சி சர்வதேச விமான நிலையம் கடந்த ஆண்டு மட்டும் 17.60 லட்சம் பயணிகள் கையாண்டுள்ளது. அதில் சர்வதேச பயணிகள் மட்டும் 13.50 லட்சம் பேர் என தரவுகள் தெரிவிக்கின்றன.