சென்னை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20க்கு மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மதுரையில் உள்ள ஹாஜிமார்தெரு பகுதியில் உள்ள நபரின் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகர் ஹாஜிமார் தெரு பகுதியில் அலி ஜிகாத் என்பவரது வீட்டில் சோதனை நடத்துவதற்காக NIA அதிகாரிகள் வருகை புரிந்தனர். இவர் வக்தே- இஸ்லாம் என்ற அமைப்பில் இருந்துவந்த நிலையில் கோவையில் கோவில் அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோல் விருத்தாசலம் அருகே மங்கலம் பேட்டையில் சுலைமான் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உக்கடம் அல் அமீன் காலனி உள்பட, 12 இடங்களில் அதிகாலை முதல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ள பக்ருதீன்(35) வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.




இதன் ஒரு பகுதியாக திருச்சி பீமநகர் கூனி பஜார் பகுதியில் அஷரப் அலி என்பவர் சகோதரருடன் வசித்து வருகிறார். இன்று அதிகாலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை துவக்கினர். 5 அதிகாரிகள் வீட்டில் சோதனை ஈடுபட்டனர். பின்னர் அவர் எலக்ட்ரிக்கல் கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். அந்தக் கடை திருச்சி இபி ரோட்டில் உள்ளது. அங்கும் அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். இவருடைய உறவினர் பாகிஸ்தானில் இருந்ததாகவும், மற்ற உறவினர்கள் அங்கே சென்று அடிக்கடி அவரை பார்த்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.


மேலும், 4க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். என்ஐஏ அதிகாரிகள் சோதனையால் பீமநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.