பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(44). வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதேபள்ளியில் வேப்பந்தட்டையை சேர்ந்த இன்ஜினியர் பாலமுருகன் மனைவி தீபா(42) கணித ஆசிரியையாக வேலைபார்த்து வந்தார். இவர்கள் இருவருக்கும் தகாத உறவுடன், பணம் கொடுக்கல் வாங்கலும் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வழக்கம்போல கடந்த நவம்பர் 15ம் தேதி பள்ளிக்குச் சென்ற இவர்கள் இருவரும் மாலையில் வீடு திரும்பவில்லை. தீபா மாற்றுத்திறனாளி என்பதால் தினமும் காரில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் வீடு திரும்பாத கணவனை கண்டுபிடித்து தரும்படி ஆசிரியர் வெங்கடேசன் மனைவி காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதேபோல் காணாமல் போன மனைவியை கண்டு பிடித்துத் தரும்படி இன்ஜினியர் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் வி. களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.


இந்நிலையில், நவம்பர் 29ம் தேதி தீபாவின் கார் கோவையில் மீட்கப்பட்டது. அதில் தீபாவின் தாலி, செல்போன், ஏடிஎம் கார்டுகள், ரத்தக் கறை படிந்த சுத்தியல், அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்ததால் ஆசிரியை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். ஆகையால் 5 தனிப்படையினர் ஆசிரியர் வெங்கடேசனை பல ஊர்களில் தேடிவந்தனர். ஆனால் கடந்த 85 நாட்களாக வெங்கடேசன் போலீசாருக்கு போக்குக்காட்டி வந்தார். இதனிடையே இந்த விவகாரத்தில் பெரம்பலூர் எஸ்எஸ்ஐ பாண்டியன், வி.களத்தூர் எஸ்எஸ்ஐ முகமது ஜியாவுதீன் ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.




மேலும் குற்றவாளிக்கு உதவியதாக வெங்கடேசன் மனைவி காயத்ரி, மைத்துனர் பிரபு, உறவினர் ராஜா ஆகிய 3 பேரையும் கடந்த டிசம்பர் 29ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த ஆசிரியர் வெங்கடேசனை நேற்று போலீசார் கைது செய்து பெரம்பலூருக்கு கொண்டு வந்தனர். ரகசிய இடத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. ஆசிரியர் வெங்கடேசன் ஆன்லைன் வர்த்தகத்தில் பல லட்சம் பணத்தை இழந்ததுடன் தீபாவிடமும் லட்சக்கணக்கில் அவ்வப்போது பணம் பெற்றுள்ளார். மேலும், கொடுத்த பணத்தை கேட்டு தீபா தொந்தரவு செய்ததால் அவரை அழைத்து சென்று கொலை செய்து பிணத்தை எரித்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து கொலை நடந்ததாக கூறப்படும் வி.களத்தூர் அருகேயுள்ள முருக்கன்குடி, கீழபுலியூர் பகுதிகளிலும், பிணத்தை எரித்ததாக கூறப்படும் புதுகை மாவட்ட பகுதிக்கும் வெங்கடேசனை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.