திருச்சி மாநகர், கோட்டை ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்நாதன். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அறிமுகமானார். அப்போது, ஜெகன்நாதனிடம் சுகாதாரத்துறை ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் தற்போது வரை அவருக்கு வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். மேலும் என்னிடம் வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்கும்படி ஜெகன்நாதன் கேட்டு உள்ளார். இந்நிலையில் தர்மலிஙகம் தலைமறைவாக இருந்துள்ளார். 


இதனால் ஜெகன்நாதன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு அல்லிமால் தெரு அருகே ஜெகன்நாதன், தர்மலிங்கத்தை பார்த்து உள்ளார். அப்போது அவரை பிடிக்க முயன்ற போது, தர்மலிங்கம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, என்னை பிடிக்க வந்தால் என் உடலை கத்தியால் கிழித்து விடுவேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பிடிக்க முயன்றபோது, தனது உடலை கத்தியால் கிழித்துக்கொண்டு சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் வழியாக இப்ராஹிம் பார்க் வரை ஓடினார்.




இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவரிடம் இருந்த கத்தியை பிடிங்கினர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். தர்மலிங்கம் தன்னை அமைச்சரின் உதவியாளர் என்று கூறி பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தியால் கிழித்ததில் காயம் அடைந்த தர்மலிங்கத்தை போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக அரசு வேலை வாங்கித் தருவதாக பலர் தொடர்ந்து மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகையால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை சார்பாக தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. அரசு தரப்பில் அறிவிக்கப்படும் தேர்வுகளை முறைப்படி எழுதினால் மட்டுமே அரசு வேலை பெற முடியும். பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தரப்படும் என ஆசை வார்த்தை கூறி பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்துள்ளது. அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடைமுறைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டுமென காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.