புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கொடுமை:
அப்போது, அவர் பேசியதாவது, "பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுப்பதில் விதிமுறைகள் இருப்பது மிகப்பெரிய கொடுமை. தேர்தல் நேரத்தில் அறிவித்த போது விதிமுறைகளை அறிவிக்கவில்லை. அப்போது ஏன் சொல்லவில்லை. மேலும் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதில் காங்கிரஸ், பா.ஜனதா என 2 கட்சியும் தேர்தல் நேரத்தில் அறிவித்துள்ளது. 2 பேரும் தேர்தல் அறிக்கையில் இதனை அறிவித்துள்ளனர்.
இதை தெரிந்து தான் அரசியல் கட்சியினர் ஆதரித்தனர். தமிழ் தேசிய கொள்கையை விட்டு வந்தால் எங்களுடன் இணைந்து செயல்பட தயார் என பா.ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா கூறியுள்ளார். அதற்கு வாய்ப்பு இல்லை. தமிழ் தேசிய சித்தாந்தம் தோல்வியடைந்ததாக திருமாவளவன் கூறியிருக்கிறார். பொறுத்திருந்து பாருங்கள் தெரியும். பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றி பேசுவதை விட்டுவிடலாம். ஈழத்தமிழர்களுக்கு நல்லது செய்ய மத்திய அரசு நினைத்தால் கச்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு குடியுரிமை பெற வேண்டும் என்றார்.
டி.ஐ.ஐி. தற்கொலை:
மேலும் கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்ததற்கு காரணம் பணிச்சுமை தான். 6 மாதமாக அவருக்கு விடுமுறை கொடுக்கவில்லை. எனக்கு அவரை தெரியும். நல்ல அறிவாளி, சமூக பற்றுக்கொண்டவர், எல்லாரையும் நேசிக்க கூடியவர். துணிவான அவர் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய கோழைத்தனமானவர் அல்ல. அவரது தற்கொலை அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் உள்ளது. டி.ஐ.ஜி. அளவில் உள்ளவர்களே மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்கிற நிலை இருக்கிற போது சாதாரண போலீசாரின் நிலையை கூறவா வேண்டும்.
பேனா சின்னத்தை உடைப்பேன்:
எனவே போலீசாருக்கு சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுமுறை விட வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்ல அனுமதிக்கலாம். தமிழ் சினிமாவில் பட்டியலின மக்களின் உரிமை பற்றி பேசப்படுவதை நான் வரவேற்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். சென்னை மெரினா கடல் பகுதியில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தாலும் நான் உடைப்பேன். சென்னையில் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கை பறிபோனதில் நிவாரணம் வழங்காமல் முறையற்ற பதில் கூறுவது சரியல்ல என தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்