தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு ஓய்வுபெற்ற நிலையில், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். மேலும் அவர் பதவியேற்றுக் கொண்டபோது, `ரவுடிகளுக்கு எதிரான, கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும். பொதுமக்கள் மற்றும் போலீசாரின் குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களின் மனுக்களை அரசு விடுமுறை நாட்கள் தவிர தினமும் காலை 11.30 மணிக்கு டி.ஜி.பி. அலுவலகத்தில் நேரில் பெறுவேன். அலுவலகத்தின் பார்வையாளர்கள் அறையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை என்னிடம் அளித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்' என்று தெரிவித்தார். இந்த நிலையில் கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, டி.ஜி.பி. சங்கர் ஜிவால், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவுரை கூறி வருகிறார். அந்த வகையில் மதுரையில் நேற்று காலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு அவர் மாலையில் திருச்சி வந்தார்.

 



 

இதனை தொடர்ந்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமையில், திருச்சி சரக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கினார். அதன் விவரம்..., காவல்துறையினர் பணியின்போது மன அழுத்தம் இன்றி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சைபர் கிரைம் குற்றங்களை கவனத்துடன் கண்காணித்து குற்றங்களை தடுக்க வேண்டும்.

 

பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். விடுமுறை வழங்க வேண்டும். பொதுமக்களுடன் நட்புறவை பேணிக்காப்பதை காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். உரிய காரணங்களோடு விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் போலீசாருக்கு விடுமுறை வழங்க வேண்டும். பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவ்வப்போது புத்துணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். போலீசார் தங்களுடைய குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என அறிவுரை வழங்கினார். 

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண