திருச்சி மாவட்டம், சோமரசன்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட மல்லியம்பத்து பஞ்சாயத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மயானத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ரியல் எஸ்டேட்காரர்கள் ஆக்கிரமித்து விட்டதாக புகார் எழும்பியது. கொலை செய்யப்பட்ட சிவகுமார், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட இடத்தினை பார்வையிட்டதில், சம்பந்தப்பட்ட இடம் மல்லியம்பத்து ஊராட்சிக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள்  சம்பந்தப்பட்ட இடத்தை  அளந்து அளவு கற்கள் நாட்டினர். ஆனால் கற்கள் நடப்பட்ட அன்று இரவோடு இரவாக சில மர்ம நபர்கள் சிலர் கற்களைத் பிடுங்கி அப்புறப்படுத்தினர். இதுகுறித்து மல்லியம்பத்து தலைவர் விக்னேஸ்வரன், ரமேஷ், ஆகியோர் சோமரசன்பேட்டை காவல் நிலையத்தில் கிராம மக்கள் சார்பாக புகார் அளித்தனர்.




மேலும்  எங்கள் கிராமத்தில் மிக அருகில் 100 மீட்டர் தூரம் உள்ள இடத்தில் எங்கள் மூதாதையர்கள் கிராம பொது பயன்பாட்டுக்காக சர்வே எண் 49-இன் பகுதியில் ஒழுங்கற்ற நான்கு எல்லைகளை கொண்ட சுமார் 5 சென்ட் பரப்பளவு உள்ள நிலம் எங்கள் கிராம கணக்கில் எங்கள் கிராம பெயரிலேயே மயானம் ஒன்று அமைத்திட நிலம் ஒதுக்கப்பட்டது. அது தற்போது தகுந்த பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாமல் பொதுமக்கள் காலப்போக்கில் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தியாதால் கிராமத்திற்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொலையாளி தீபக் எங்கள் கிராமத்தை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல், நாகராஜன், மணப்பாறை BDO ரமேஷ்குமார், செல்வராஜ் உள்ளிட்ட செங்கதிர் சோலையை சேர்ந்த சில முக்கிய நபர்கள், வாசன் ரியல் எஸ்டேட் நிறுவனர் ரவி முருகையாவிடம் பணம் பெற்று கொண்டு நிலத்தை தங்களது பெயரிலேயே கிரையம் செய்து கொண்டு அனுபவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சிவகுமார் புகார் அளித்திருந்தார்.




இந்நிலையில் சோமரசன் பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, காரணம் எங்களை கைது செய்தால் கிராம பிரச்சினையை உருவாக்கி விடுவோம் என்று காவல் அதிகாரிகளையே சம்பந்தப்பட்ட நபர்கள் மிரட்டியதால் இப்பிரச்சனையை கண்டும் காணாதவாறு விட்டு விட்டனர். இந்நிலையில்தான் நேற்று செங்கதிர் சோலையை சேர்ந்த விக்னேஸ்வரன் ஆதரவாளர் சிவா என்கின்ற சிவகுமார் வீட்டில் இருந்தபோது உருட்டுக்கட்டையால் பிரபாகரன் மற்றும் தீபக் ஆகியோர் அடித்துக் கொலை செய்துள்ளனர்.


இதுதொடர்பாக சோமரசன்பேட்டை காவல்துறையினர் சிவகுமார் மனைவி மைதிலி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் செங்கதிர் சோலையை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் ஆதரவாளர் பிரபாகரன், தீபக் ஆகியோர் திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் மற்றும் வாசன் எஸ்டேட் நிறுவனர் ரவி முருகையா தூண்டுதலின் பேரில் சிவகுமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 4 பேர் மீதும், வழக்கு பதிவு செய்த நிலையில் பிரபாகரன் மற்றும்  தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான கதிர்வேல் தலைமறைவாக உள்ளதாகவும், வாசன் ரியல் எஸ்டேட் அதிபர் ரவிமுருகையா கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.