சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையம் உள்ளது. இந்த திருச்சி விமான நிலையத்தை திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இன்றளவும் டிக்கெட் அனைத்தும் புக் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வந்தது. இதில் 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முனையம் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 1200 கோடி செலவில் இந்த புதிய விமான முனையமானது கட்டப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 900 பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய விமான முனையமானது கட்டப்பட்டு வருகிறது. இதில் லக்கேஜ்களுக்கான கன்வேயர் பெல்ட்டுகளுடன் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையமானது கடந்த 2 மாதங்களுக்கு முன்பே திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் திறப்பு தேதி தள்ளிப்போனது.




இந்நிலையில், திருச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலைய கட்டுமான பணிகளை தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது விமான நிலைய அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் விமான நிலைய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கேட்டு அறிந்தனர்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசியது.. 


தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் அனைவருக்கும் அனைத்தும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் முனைப்போடு செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்ததை அடுத்து, நாடாளுமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்து அதற்கான நிதிகளை பெற்று தற்போது பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையம் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் திறப்பதற்கான பணிகளை செய்து வருகிறோம் என்றார். 




திருச்சி விமான நிலையம் பயணிகளின் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இருக்க கூடிய பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் திருச்சி விமான நிலையம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு வெளி மாநிலம் மற்றும் நாடுகளில் இருந்து அதிக அளவில் தொழில் முனைவோர் வருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது இந்த விமான நிலையத்தில் ஒரு சில மாற்றங்களை தெரிவித்துள்ளோம், அதை விரைவில் முழுமையாக மாற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தஞ்சாவூர் ஊரிலிருந்து மக்கள் பயணிக்க கூடிய விமான சேவை தொடங்கப்படும் என்றார்.