சென்னைக்கு நிகராக திருச்சியை உருவாக்க வேண்டும், என்று பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி திருச்சி மாவட்டத்தை பெரும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என திட்டங்கள் வகுத்து தற்போது நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


குறிப்பாக பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க  நிதி ஒதுக்கீடு செய்து மொத்தம் 350 கோடி ரூபாய்  செய்தது தமிழ்நாடு அரசு. இதில் பேருந்து முனையம் 159 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்பட்டு வந்தது. மேலும் தேவைக்கு ஏற்ப நிதியும் கூடுதலாக கேட்டு பெறுவோம் என அமைச்சர் கே.நேரு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 




பஞ்சப்பூர் பேருந்து முனையம் 85 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது


மேலும், பேருந்து நிறுத்துமிடம் நான்கிலும் சுமார் 404 பேருந்துகளை நிறுத்துவதற்கு வசதி உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது தரைத்தளம் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. முதல் தளம் உள்ளூர் பேருந்துகளுக்காகவும், தரைத்தளம் வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.


இந்த இரண்டு தளங்களும் 2 எஸ்கலேட்டர் மற்றும் 3 எலிவேட்டர்களை கொண்டதாக கட்டப்படுகிறது. 404 பேருந்துகளை தவிர 124 இடங்கள் உடனடியாக வெளியே செல்வதற்கு தனியாக அமைக்கப்பட்டு வருகிறது.


மேலும் 142 பேருந்து நிறுத்தங்கள் நீண்ட தூர பயண பேருந்துகள் நிறுத்துவதற்கும், 78 பேருந்து நிறுத்தங்கள் குறுகிய தூர பயணத்திற்கு செல்லும் பேருந்துகளுக்கு அமைக்கப்பட்டுள்ளது. நகரப்பேருந்துகள் 60 இடங்களில் நிற்கும் வகையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது சுமார் 85 சதவீத பணிகள் நடைபெற்று முடிந்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் சென்னையில் அண்மையில் திறக்கபட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்று விமர்சனம் எதுவும் வரகூடாது. 




பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு - முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்கப்படும்.


ஆகையால் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் அனைத்தும் தரமாக இருக்க வேண்டும். தரம் இல்லாமல் பணிகளை மேற்கொண்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


திருச்சியை, சென்னைக்கு நிகராக மாற்றுவதில் இந்த திட்டம் மிக முக்கியமானது என அதிகாரிகள் தரப்பில் தகவல் கூறினர். இந்நிலையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் கே. என். நேரு தலைமையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும். மிக உயரமான கருணாநிதி சிலை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முதலமைச்சரிடம் இதுகுறித்து பரிந்துரை செய்யப்பட்டு விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.