திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஜக ஓபிசி அணி சார்பாக சூர்யா சிவா யூடியூப் சவுக்கு சங்கர் மீது புகார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:


பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றியும், முக்குலத்தோர் சமுதாயத்தை பற்றியும் இழிவான கருத்துக்களை யூடியூபில் பதிவு செய்துள்ளார். குற்றப்பின்னணியில் இருப்பவர்கள் மட்டுமே அந்த சமுதாயத்தில் இருக்கிறார்கள் எனவும், எந்நேரமும் இளைஞர்கள் வேலைக்கு செல்லாமல் மது போதையில் சுற்றித் திரிவதாகவும், பொது நிறுவனங்கள் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களை வேலைக்கு எடுப்பதற்கு யோசிப்பதாக தெரிவித்துள்ளார்.


மேலும், பசும்பொன் தேவர் ஜெயந்தியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் ஒற்றை சமூகத்தை, தெய்வமாக வழிபடும் பசும்பொன் தேவர் முத்துராமலிங்கரை இழிவுபடுத்தும் விதமாகவும், கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.




சவுக்கு சங்கர், எடப்பாடி பழனிசாமிக்கு கைக்கூலியாக செயல்படுகிறார். 


இது போன்ற கருத்து சமுதாயத்தில் ஜாதி கலவரத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. ஆகையால்  சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாஜக ஓபிசி அணி சார்பாக புகார் மனு அளித்துள்ளோம். 


பெண்களைப் பற்றியும், பெண் காவலர்களைப் பற்றியும் இழிவாக பேசியதற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து காவல்துறை தரப்பில் 35 புகார்கள் பெற்றுள்ளனர். ஆனால் முக்குலத்தோர் சமுதாயத்தை பற்றி இழிவாக பேசியதற்கு கோயம்புத்தூரில் மட்டுமே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக எப்போதும் ஜாதி அரசியலையும், மத அரசியலையும் விரும்பாதவர்கள். ஆகையால் தேவர் ஜெயந்தியை பற்றி இழிவாக பேசியதை பற்றி புகார் தெரிவிப்பது எங்களுடைய கடமை  ஆகும். 


நான்  பாஜகவிற்கு வந்த பிறகு 32 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் இருந்தேன். அப்போது எனக்கு சிறை காவலராக செந்தில்குமார் இருந்தார் அவர் நேர்மையானவர் சட்ட விதிகளை உட்பட்டு நடந்து கொண்டார். 


ஆனால் சவுக்கு சங்கர் பல இடங்களில் பகைகளை சம்பாதித்து வைத்துள்ளார். இன்றைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார். ஆகையால் தான் பல்வேறு விமர்சனங்களை யூடியூபில் வெளியிட்டு வருகிறார்.




சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து உள்ளது - பாஜக சூர்யா சிவா 


கோட நாடு கொலை வழக்கு சம்பந்தமாக எடப்பாடி பழனிசாமி உடன் மிக நெருக்கமாக இருந்தார் என சில விசாரணைகளில் தகவல்கள் வெளிவந்துள்ளது. 


கோடைநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார். அப்போது விபத்துக்குள்ளான காரை ஓட்டி சென்றது மல்லிகா நல்லுசாமி என்ற பெண், சவுக்கு சங்கர் அவருடைய நெருங்கிய நண்பர் ஆவார். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு எடுக்கக்கூடிய அதிகாரிகள் அனைவரையும் ஒரு சில காரணங்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 


சவுக்கு சங்கர் பல விஷயங்களில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிகிறது. ஆகையால் சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேர்மையானவர் அவருடைய பாதுகாப்பில் இருப்பதே சவுக்கு சங்கருக்கு பாதுகாப்பாகும். 


அதிமுகவின் கைக்கூலியாக சவுக்கு சங்கர் செயல்பட்டு வருகிறார். ஆகையால் தான் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக யூடியூபில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். இதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரை வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.