திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகமும், பப்பாசி இணைந்து 2 வது வருடமாக நவம்பர் 23 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும் திருச்சி புத்தகத் திருவிழாவினை தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்  தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து அரங்கினை பார்வையிட்டும்,புத்தகத் திருவிழா சின்னத்தை வெளியிட்டும், "தூரிகையில் திருச்சி" மற்றும் தூய காற்றே எனும் நூல்களை வெளியிட்டனர். 


மேலும் திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் 160 புத்தக அரங்குகளும், 150க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களின் புத்தகங்களும் அனைத்து வகையான வாசகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் வரப்பெற்று விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு விற்பனை செய்யும் அனைத்துப் புத்தகங்களுக்கும் விற்பனை விலையில் 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி விலையுடன் விற்பனை செய்யப்படுகிறது.




தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கோளரங்கம், வான் நோக்குதல் மாணவர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இயல், இசை, நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திருச்சி மாவட்ட எழுத்தாளர்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்காக தனி புத்தக விற்பனை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் மாலை நேரத்தில் மனதை கவர்ந்திடும் வகையில் பல்வேறு பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் பங்குபெறும் 3, சிறப்பு நிகழ்ச்சிகளும், திருச்சி' எழுத்தாளர்களையும் பாராட்டிச் சிறப்பிக்கப்படுகின்ற நிகழ்வும் நடைபெறுகின்றன. மாவட்ட அறிஞர்கள், எழுத்தாளர் பேராசிரியர் கரு.ஆறுமுகத் தமிழன் அவர்கள் "கற்றதனால் என்ன பயன்" என்ற தலைப்பில் உரையாடல் நடைபெறவுள்ளது. சிறார் சிறப்பு அரங்கம் சார்பில் கார்திகா கவின் குமார் அவர்கள் "கதை சொல்லி" கதை "கதையாம் காரணமாம்" வித்யா தன்ராஜ் அவர்களின் கதை சொல்லி கதை சொல்லல் மற்றும் பயிற்சி என்ற தலைப்பிலும், பல்கலைக்கழக மாணவி மாரியம்மாள் அவர்களின் கவிதை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசமாக்கப்பட்டுள்ளது. இப் புத்தகத் திருவிழாவை கண்டு களிக்க பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


திருச்சி புத்தகத் திருவிழா நவம்பர் 23 வியாழக்கிழமை தொடங்கி டிசம்பர் 04 திங்கள் கிழமை வரை 12 நாட்கள் தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இவ்வளாகத்தில் உணவு அரங்குகள் மற்றும் குடிநீர், கழிவறை வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் என தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்...


புத்தகத் திருவிழாவை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், பல்வேறு புத்தகங்களை தேடி தேடி படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை துறை பொறுப்பு அமைச்சராக வேண்டுகோளாக முன்வைப்பதாக தெரிவித்தார்.


நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்...


புத்தகங்களை வாசிக்கவும், அதனை வாங்கி படிக்கும் ஆர்வமும் அனைவரிடமும் இருக்க வேண்டும், முரசொலியில் கலைஞர் எழுதிய கடிதங்கள் தான்... நாங்கள் கொள்கை பிடிப்புடன் இருக்க காரணமாக அமைந்தது. அதேபோல் மாணவர்களும் தங்கள் அறிவை மேம்படுத்தும் புத்தகங்களை விரும்பி படிக்க வேண்டும் என்றார்.


இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், மத்திய மண்டலத் காவல் துறை துணைத் தலைவர் பகலவன், மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி  மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட மாநகராட்சி காவல் ஆணையர் கண்காணிப்பாளர் வருண்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.இனிகோ இருதயராஜ், கதிரவன், மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.