தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு சார்பில் ஆய்வு மாளிகை திருச்சி காஜாமலையில் இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:
திருச்சி - தஞ்சை பைபாஸ் சாலையில் பால் பண்ணை முதல் துவாக்குடி வரையில் சர்வீஸ் சாலை வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக முன்வைக்கப்படுகிறது. இதில் மத்திய அரசு சாலை அமைப்பதற்கு மாநில அரசுதான் நிலத்தை கையகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கேட்கிறது. மேலும் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் இந்த விவகாரத்தில் ஒரு சிலர் சர்வீஸ் சாலை வேண்டாம் உயர் மட்ட பாலம் மட்டும் போதும் என்கிறார்கள், ஒரு சிலர் சர்வீஸ் சாலை வேண்டும் என்று கேட்கிறார்கள்.
மேலும், அமைச்சர் கே.என் நேரு - அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நானும் தொடர்ந்து 3 முறை இது தொடர்பாக அனைத்து மக்களையும் ஒன்றாக கொண்டு வர வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது மட்டுமல்லாமல் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். துறை சார்ந்த அமைச்சர் நிதின் கட்கரியிடம் நாங்கள் கோரிக்கை வைத்த போது தபாலை வாங்கிய வைத்துக் கொண்டார், ஆனால் ஒன்றும் ஏற்பாடு செய்யவில்லை. நகாய் (தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ) வாயிலாக திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கப்படுவதில்லை. மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் தஞ்சை பைபாசில் உயர்மட்ட பாலம் அமைப்பதாக இருக்கட்டும், இரண்டு பக்கமும் சர்வீஸ் சாலை அமைப்பதாக இருக்கட்டும் மாநில அரசு கண்டிப்பாக அமைத்து தரும்
உரிய கால நிர்ணயம் முடிந்த பின்னரும் செயல்பட்டு வரும் 4 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து நாங்கள் கடிதம் எழுதி உள்ளோம். பணத்தை மட்டும் வசூல் செய்கிறார்களே தவிர எங்கும் பராமரிப்பு இல்லை. 7 மீட்டர் சாலையை 10 மீட்டர் சாலையாக மாற்றி சுங்க கட்டணம் வசூல் செய்யும் மத்திய அரசு, முறையாக பராமரிப்பது இல்லை குறிப்பாக முட்களை கூட அகற்றுவதில்லை. மாநில அரசுக்கு ஒத்துப்போகக்கூடிய அரசாக மத்திய அரசு இருந்தால் தான் எதையும் சரி செய்ய முடியும். மத்திய அரசு முரண்பட்டு இருப்பதால் நமக்கு சரியான பதில் கிடைக்கபெறவில்லை. மத்திய அரசின் நிகழ்ச்சிகள் நடக்கும்போது அதில் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து மாநில அரசு சார்பாக பிரதிநிதிகள் நாங்கள் கலந்து கொள்கிறோம். ஆனால் மத்திய அரசுதான் எங்களுக்கு எதிலும் ஒத்துப் போகவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.