வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி அல்லது பெரம்பலூர் தொகுதியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவின் , மகன் அருண் நேரு போட்டியிட உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் பரவி வருகிறது. இதற்காக கடந்த சில மாதங்களாக நேருவின் ஆதரவாளர்கள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேருவின் ஆதரவாளர்கள் ஒரு சிலர் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அருண் நேரு போட்டியிட வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அதேபோன்று மேலும் சிலர் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அருண் நேரு போட்டியிட வேண்டுமென தொடர்ந்து நேருவின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். 


இந்நிலையில் வருகின்ற தேர்தலில் அமைச்சர் நேருவின், மகன் அருண் நேரு எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி மாநகரில் நடைபெற்ற அனைத்து கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் அருண் நேரு கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். இதனால் வருகின்ற தேர்தலில் அருண் நேரு திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டது.




இந்நிலையில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு சார்பில் ஆய்வு மாளிகை திறப்பு விழா திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் கலந்து கொண்ட தொழிலதிபரும் அமைச்சர் கே.என்.நேருவின் மகனுமான அருண் நேரு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தேதி வந்த பிறகு நானே உங்களுக்கு சொல்கிறேன். விரைவில் மக்களை சந்திப்பேன் என்றார். பெரம்பலூர் அல்லது திருச்சி எந்த தொகுதியில் போட்டியிட உள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தலைமை என்ன சொல்கிறதோ அதுதான் இறுதி முடிவு. எந்த தொகுதியா இருந்தாலும் போட்டியிட நான் தயார் என்று சூசகமாக பதில் அளித்தார் அருண் நேரு.