கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக மாவட்ட மாநகர இளைஞரணி சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரகநேறி பகுதியில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் திமுக சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக இன்று கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டிடம் மற்றும் 10 மற்றும் 12 வகுப்புகளில் அரசு பள்ளியில் பயின்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளுக்கு இலவசமாக கைபேசி வழங்கப்பட்டுள்ளது.
முதலில் நாம் அனைவரும் நம்முடைய அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும். அப்போதுதான் நமது இயக்கத்தின் மீது யார் அவதூறான கருத்துக்களை தெரிவித்தாலும் அதற்கு பதிலடி கொடுக்க முடியும்.
மேலும் திமுக இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போன்று நாம் அனைவரும் தீவிரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் நமது இயக்கம் வலுபெறும் தீவிரமடையும் அதற்கு அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த நமது இயக்க நிர்வாகிகள் தொண்டர்களுக்கு நன்றிகள்.
தமிழ்நாட்டிலே முதலில் கழக நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லும் கூட்டம் திருச்சியில் நேற்று கழக முதன்மைச் செயலாளரின் கே.என். நேரு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருச்சி எம்பி பதவி ஏற்ற பிறகு, தேர்தல் நேரத்தில் மக்களை எவ்வாறு சந்தித்து வாக்கு சேகரித்தமோ அதேபோன்று வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து நன்றி சொல்வோம் என்றார்.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரும் சொன்ன ஒரே வார்த்தை நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிர்ப்பான ஒரு திட்டம். உடனடியாக அதனை ஒழித்து விட வேண்டும் என கூறுகின்றனர். நீட் தேர்வை முற்றிலுமாக அகற்றுவதற்கு தமிழக முதல்வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஒவ்வொரு நிலையிலும் முயற்சித்து வருகின்றனர். அவர்கள் வழியில் தொடர்ந்து நீட் தேர்வை நாங்களும் எதிர்ப்போம். திமுக தலைவர் நமது முதலமைச்சர் என்ன கட்டளை இடுகிறாரோ அதனை செயல்படுத்துவோம் எனக் கூறினார்.