திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அன்பில் பொய்யாமொழியின் 25 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது..
மத்திய அரசிடம் இருந்து பள்ளிகல்வி துறைக்கு மட்டும் கடந்த ஜூன் மாதம் வரை 573 கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது. ஆனால் தற்போது வரை மத்திய அரசிடம் இருந்து வராமல் உள்ளது. மேலும், இது தொடர்பாக திமுகவினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மத்திய கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருக்கிறோம்.
குறிப்பாக 60 முதல் 40 சதவீதம் வரை கல்விக்கான நிதியை மத்திய அரசு எப்போதும் நிறுத்தி விடக்கூடாது. பல லட்சம் மாணவர்களுடைய கல்வி சார்ந்த விஷயம் இதில் நீங்கள் அரசியல் செய்யக்கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளோம், ஆனால் தற்போது வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் அப்படியே உள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மத்திய அரசுக்கு பலமுறை இது குறித்து கடிதம் எழுதி இருக்கிறோம். அதற்கு மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எம்பிகள் வலியுறுத்தினர்.
மேலும், கூட்டத்தொடர் முடிந்து நீண்ட நாட்கள் ஆகியும் நிதி வராமல் இருப்பது தொடர்பாக நேற்று முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக கூட மத்திய அரசை வலியுறுத்தி விட்டு சென்றுள்ளார்.
குறிப்பாக 573 கோடி மட்டும் இல்லை, கடந்த ஆண்டு வரவேண்டிய 249 கோடியும் மத்திய அரசு நிறுத்தியுள்ளனர்.
தேசிய கல்வி கொள்கை ஏற்கொண்டால் மட்டுமே, நிதி உடனே கிடைக்கும் என மத்திய அரசு தெரிவிக்கிறார்கள்.
மத்திய அரசு, மாநில அரசுக்கு அழுத்தம் தருகிறது.
புதிய கல்வி கொள்கையில் இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் தருகிறதா என்ற கேள்விக்கு?
புதிய கல்விக் கொள்கையை கொள்கையில் இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் தருவது உண்மை தான் என்றார்.
பள்ளி கல்விதுறையை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தி வருகிறது. மத்திய அரசு அதனை ஊக்கப்படுத்த வேண்டுமே என்பதையே மறந்து விடுகிறார்கள். குறிப்பாக கொள்கை என்பது விவாதம் சார்ந்தது, அதற்காக மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்துவது நியாயம் அல்ல. ஜிஎஸ்டியில் இருந்து அனைத்து தொகையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. கடந்த மூன்று ஆண்டு காலமாக கடுமையான நிதி சுமையை தமிழக அரசு சமாளித்து கொண்டிருக்கிறது. அதேபோன்று தான் கல்விக்கான நிதி சுமையும் சமாளித்து வருகிறோம் என்றார்.
கடுமையான நிதி சுமைகள் வந்தாலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்துகளையும் இந்த அரசும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்வார் என்றார்.