தமிழ்நாட்டின் திராவிட கட்சிகளின் வரலாற்றில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் திருச்சி. சென்டிமென்ட் விஷயங்களில் நம்பிக்கையுடைய எம்.ஜி.ஆர், அ.தி.மு.க-வின் 2-வது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்தி திருப்புமுனையை உண்டாக்கினார். பிறகு தனது ஆட்சியின் நலத்திட்டங்களில் முக்கியமான சத்துணவுத் திட்டத்தையும் திருச்சியிலேயே அவர் தொடக்கி வைத்தார். திருச்சியை 2-வது தலைநகரமாக மாற்றப்போவதாகவும் அறிவித்தார். திருச்சியில் தொடங்கும் செயல்கள் நல்லபடியாக அமையும் என நம்பிய எம்.ஜி.ஆர் தனது வயதான காலத்தில் திருச்சியில் ஒரு வீடு வாங்கி அதில் விரும்புகிற சமயத்தில் வந்து தங்க வேண்டும் என்று விரும்பினார். மேலும் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் விரும்பிய பல செயல்கள் கைகூடின. அவர் விரும்பியவற்றுள் நிறைவேறாமல் போனது மிகச் சில தான். அதில் திருச்சி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து உறையூர் செல்லும் சாலையில் ஒரு இல்லம் அமைத்து தனது ஓய்வு காலத்தில் சில நாட்களை அங்கே கழிக்க வேண்டும் என அவரது கடைசி ஆசை ஆகும். திருச்சியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள எம்.ஜி.ஆர். பங்களா தற்போது குப்பைகள் கொட்டும் அவலம் யாராலும் கண்டுகொள்ளப்படாத சோகம்.
அப்போது தனது விருப்பத்தை அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த திருச்சி நல்லுசாமியிடம் தெரிவிக்கவே, அவர் திருச்சியில் குடமுருட்டி ஆற்றங்கரை அருகே காவிரிக்கரையில் இருந்து சற்றே உள்ளே உறையூர் செல்லும் சாலையோரம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தோட்டங்களுக்கு நடுவே பங்களா மாதிரியான வீடு மற்றும் பணியாளர் ஓய்வு இல்லம் ஆகியவற்றுடன் கூடிய ஒரு இடத்தை தேடிப்பிடித்து அந்த இடம் பற்றிய விவரங்களை எம்.ஜி.ஆருக்குத் தெரிவித்தார்.
எனக்கு எது பிடிக்கும் என உனக்குத் தெரியும். உனக்குப் பரிபூரணமாகப் பிடித்திருந்தால் அந்த இடத்தை கிரையம் செய்யலாம் என எம்.ஜி.ஆர் சொல்லவே உடனே அந்த இடத்தை நல்லுசாமி விலை பேசினார். சோமரசம்பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் ஆரோக்கியசாமி என்பவரிடமிருந்து அந்த இடம் கிரையம் பேசி எம்.ஜி.ஆர் பெயரில் 1984-ம் ஆண்டு மே 8-ம் தேதி திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அப்போதைய அ.தி.மு.க. அமைச்சரான நல்லுசாமி மற்றும் உறையூரைச் சேர்ந்த வீ.சந்திரன் ஆகியோர் எம்.ஜி.ஆருக்காக வாங்குவதாக கையெழுத்திட்டு கிரையப்பத்திரம் பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து அந்த பங்களாவில், தான் விரும்பும் சில மாற்றங்களைச் செய்யச்சொன்னாராம் எம்.ஜி.ஆர். அதன்படி முதல் மாடி, தரைத்தளம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர் சொன்ன மாதிரி மாற்றி அமைக்கப்பட்டது. விரைவில் அந்த பங்களாவில் வந்து தங்குவதாகச் சொன்ன எம்.ஜி.ஆருக்கு திடீரென உடல்நலம் குன்றியது. பிறகு தனது வாழ்நாளின் இறுதிவரை அந்த இல்லத்துக்கு வரமுடியாத சூழ்நிலை உருவாகியது.
மேலும் பங்களா வாங்கியபோது நியமிக்கப்பட்ட காவலாளி ஆறுமுகம் இப்போதும் அந்த பங்களாவின் காவலராக இருக்கிறார். தற்போது அந்த பங்களாவில் பிரதான கட்டிடத்தைத் தவிர மற்ற கட்டிடங்கள், சுற்றுச்சுவர் ஆகியவை சிதிலமடைந்து காணப்படுகிறது. சுற்றுச்சுவரை உடைத்து உறையூர் பகுதி மக்கள் அந்த பங்களாவின் ஒரு பகுதியை குப்பைத் கொட்டும் இடமாக மாற்றிவிட்டனர். அந்த தோட்டத்தின் கிழக்குப் பகுதியில் சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள்கூட கட்டிவிட்டனர். இந்த பங்களா யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக எம்.ஜி.ஆரின் அண்ணன் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் அந்த இடத்தை யாருமே கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். காவலாளிக்கு சம்பளம்கூட யாரும் தருவதில்லையாம். அவர் வாடகையில்லாமல் அங்கே தங்கிக்கொண்டு வெளியே சில வேலைகளைச் செய்து பிழைப்பை ஓட்டி வருகிறார். எம்.ஜி.ஆரின் கனவை கண்டுக்கொள்ளுமா அதிமுக? பங்களாவை பராமரிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.