புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம் (வயது 53). இவர் ரியல் எஸ்டேட் தொழிலும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆப்டிக்கல்ஸ் கடையும் நடத்தி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி இரவு இவர் வீட்டின் முன்பு அமர்ந்து செல்போனை பார்த்துகொண்டிருந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் 3 பேர் வீட்டின் பின்புறமாக வந்து முகமது நிஜாமை கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர்.


மேலும் அவரது வீட்டினுள் சென்று மனைவி ஆயிஷா பீவியை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டு பெட்டகத்தில் வைத்திருந்த 170 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்  இந்த கொலை சம்பவம் தொடர்பாக மணமேல்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தை காவல்துறை  உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட காவல் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் சூப்பிரண்டு ஜெரீனா பேகம் தலைமையில் கோட்டைப்பட்டினம் காவல் துணை சூப்பிரண்டு மனோகரன், மணமேல்குடி இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், மாரிமுத்து, பிரபாகரன் ஆகியோர் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.


இந்த தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் அந்தபகுதியில் செல்போன் கோபுரங்களில் பதிவான செல்போன் சிக்னல்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் உள்ளிட்டவற்றை வைத்து விசாரித்தனர்.


8 பேர் கைது


இதில் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் (22), சூர்யா (24), ஸ்ரீகாந்த் (21), ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்த ஷேக்முகமது யூசுப் (32), உசிலங்காட்டை சேர்ந்த ரதீஷ் (24), இலுப்பூரை சேர்ந்த கதிரவன் (32), லோகேஷ் (25), நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது யூனுஸ் (29), மணமேல்குடியை சேர்ந்த ஜோஸ்மில்டன் ஆகிய 9 பேருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜோஸ்மில்டனை தவிர மற்ற 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 62 பவுன் நகைகள் மற்றும் 188 கிராம் வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. மேலும் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள், 2 கத்திகள், 3 முக கவசங்கள் மற்றும் ஒரு கையுறை ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜோஸ்மில்டன் வெளிநாடு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.




இந்த வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டினார். பின்னர் கைதான 8 பேரும் அறந்தாங்கி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேரை காவல்துறையினர்  கைது செய்த சம்பவம் அறிந்ததும் அப்பகுதி மக்கள் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த வழக்கில் முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது. மேலும், தொழில் அதிபரை கொலை செய்த கொலையாளிகள் 3 பேர் யார்? என்பதை தற்போது கூற முடியாது. இதேபோல் இந்த கொலை எதற்காக நடந்தது என்பதையும் தற்போது கூற இயலாது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.