திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் காவேரி பாலத்தை கடந்து சென்றால் புகழ்பெற்ற திருவானைக்காவல் கோபுரத்தின் முன்பே மேல விபூதி பிரகாரத்தின் அருகில் உள்ளது, இந்த பார்த்தசாரதி விலாஸ். திருவானைக்காவல் பேருந்து நிலையத்தின் அருகில் சென்று பார்த்தசாரதி விலாஸ் என்று கேட்டால் குழந்தையும் சொல்லிவிடும். அந்த அளவிற்கு புகழ் பெற்ற உணவகத்தை பற்றி இங்கே பார்க்கலாம். நெய் ரோஸ்ட் என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். இந்த கடையில் மிகவும் புகழ் பெற்றது இந்த நெய் ரோஸ்ட் தான். குறிப்பாக, இந்த கடையில் செய்யப்படும் நெய் ரோஸ்ட்டை முன்னாள் அரசியல் தலைவர்கள் எம்ஜிஆர், காமராஜர் போன்றவர்கள் முதல் தற்போது உள்ள முக்கிய பிரபலங்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்களாம்.  அப்படி என்ன உள்ளது இந்த நெய் ரோஸ்ட்டில் என்று பார்த்தால் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக ஒரே பக்குவத்தில்தான் இந்த தோசையை தயாரிக்கின்றனர். மேலும் சரியான அளவில் 4 பங்கு புழுங்கல் அரிசிக்கு ஒரு பங்கு உருட்டு உளுந்து சேர்த்து அதனை சிறப்பான பதத்தில் எடுத்து, அந்த மாவினால் தோசை வார்க்கப்படுகிறது.


மேலும், இந்த தோசையில் சுத்தமான பசு மாட்டு பாலில் செய்யப்பட்ட வெண்ணெயை உருக்கி, அதனை நெய்யாக மாற்றி அந்த நெய்யைத்தான் பயன்படுத்துகின்றனர்.




இதனால் சுவை மேலும் அதிகமாக இருக்கின்றது. இந்த சுவை போதாது என்று இதற்கு ஏற்றவகையில் சூடான சாம்பார் மற்றும் கார சட்னியையும் செய்து கொடுக்கும்போது அதை விட வேறு என்ன வேண்டும். எனவேதான், பல ஆண்டுகாலமாக இந்த ஹோட்டலில் நெய் ரோஸ்ட் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. இங்கு கிடைக்கும் இந்த நெய் ரோஸ்ட்டை வாங்கி, அதன் மேலே சாம்பாரை ஊற்றி, அதன் அருகில் காரச் சட்னியும் தேங்காய் சட்னியும் வைத்து மூன்றையும் கலந்து சாப்பிட்டால், அதன் சுவை மணத்துடன் சேர்ந்து நாவில் வைத்தவுடன் கரைந்து விடும் அளவுக்கு சுவையாக இருக்கின்றது. இதற்கென்றே தனி ரசிகர் பட்டாளமும் இருக்கின்றது. சரி நெய் ரோஸ்ட்தான் இங்கு சிறப்பு என்று பார்த்தோமேயானால், இங்கு தயாரிக்கப்படும் இட்லி மற்றும் மற்ற டிபன் வகைகளும் மிகுந்த சுவையுடன் இருக்கின்றன.




இது மட்டுமல்லாது டீ, காபி போன்ற வகைகளுமே மிகவும் சுவையாக உள்ளது. இதற்கு காரணம் அவர்கள் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக அதே பக்குவத்தில் அதே சுவையை தருவதுதான் என்று கூறுகின்றனர் அங்கு வரும் வாடிக்கையாளர்கள். ஒரு உணவகத்தின் புகழ் மாறாமல் இருப்பதற்கு காரணம் பல ஆண்டுகாலமாக கொடுக்கப்பட்டு கொண்டிருக்கும் சுவை மாறாமல் இருப்பதே ஆகும். வயிற்றுப் பசியை போக்கும் உணவகங்கள் இதுபோன்று சுவையையும் தரத்தையும் மாற்றாமல் இருந்தால்  உணவகமும் சிறக்கும், மக்களும் மகிழ்வர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திருச்சிக்கு வரும் மக்கள் யாராக இருந்தாலும் இந்த உணவகத்தை பற்றி கேள்விபட்டால் இங்கு வந்து உணவு அருந்தாமல் செல்லமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.