திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி மதிமுக சார்பாக திருச்சி மாநகர் புறநகர், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் , மத்திய மண்டலம் சார்பாக தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்துக்கொண்டு நிதியை பெற்றுக்கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ பேசியது.
”நடைபெற்ற தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரின் போது தமிழக ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு சென்றது குறித்த கேள்விக்கு? பதில் அளித்த அவர், தமிழ்நாடு வரலாற்றில் அரசின் உரையை புறக்கணித்து சென்றது தவறு. சட்டபேரவை மரபுபடி முதலில் தமிழ்தாய் வாழ்த்து பாடல், முடியும் போது தேசிய கீதம் ஒலிப்பது வழக்கம். ஆனால் ஆளுநர் ரவி, 2 முறையும் தேசிய கீதம் வாசிக்க வேண்டும் என்று சொல்வது முரண்பாடாகும். இதே ஆளுநர் ரவி சென்ற முறை தேசிய கீதம் ஒலித்து கொண்டு இருக்கும் போதே வெளிநடப்பு செய்தார். குறிப்பாக கடந்த முறை நடைபெற்ற சட்டபேரவையில் ஆளுநர் ரவி உரையாற்றும் போது, காமராஜர், பெரியார் ,அம்பேத்கார், அண்ணா ,கலைஞர் ஆகிய தலைவர்களின் பெயர்களை தவிர்த்து மற்றதை வாசித்தார். தொடர்ந்து ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசை புறக்கணித்து செயல்படுகிறார்.
மேலும் வருகின்ற கூட்டங்களில் RSS ஸ்லோகம் வாசிக்க வேண்டும் என கூறுவார். இவர் RSS கொள்கை பரப்பு செயலாளராக செயலாற்றி வருகிறார்.
இந்திய அரசு சட்டத்தின்படி மாநில அரசுக்கு ஆளுநர் உறுதுணையாக செயல்பட வேண்டும் என்பதே ஆகும். அது மட்டுமல்லாமல் மாநில அரசு நிறைவேற்றப்படும் மசோதாகள் மீது ஆளுநர் கருத்துகளை தெரிவிக்கலாம், ஆனால் புறக்கணிக்க முடியாது. தமிழ்நாட்டில் மட்டும்தான் மாநில அரசு நிறைவேற்றிய மசோதாகளை ஆளுநர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். இந்த நிலைமை தமிழ்நாட்டில் மட்டுமல்ல பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நிஜாம் புயல், மழை வெள்ளம் பாதிப்பால் பாதிக்கப்பட்டபோது ஒன்றிய அரசின் குழுக்கள் நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகமாக உள்ளது. உரிய நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்கள். ஆனால் இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை” என்றார்.
இந்நிலையில் சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்குவதற்காக நிதிகளை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். இரண்டாம் கட்டம் மெட்ரோ ரயில் பணிக்கு 63,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கான 2019 ஆண்டு ஒப்புதல் அனுப்பபட்டும், இதுவரை நிதிகளை மத்திய அரசு அளிக்கவில்லை. தற்போது நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் அனைத்தும் மாநில அரசு நிதியிலிருந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை அளிக்காமல்,நிதி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது இதனால் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதில் மிகவும் சிரமமாக உள்ளது.
திமுக - மதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை :
இந்திய கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக உள்ளது. பாஜகவை இந்தியாவிலிருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்பதே எங்கள் கூட்டணியின் நோக்கம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி பேச்சு வார்த்தை சுமுகமாகவும் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் 2 மக்களவை இடங்கள் மற்றும் 1 மாநிலங்களவை இடங்களை எங்கள் தரப்பில் இருந்து வலியுறுத்தியுள்ளோம் என்றார். மேலும், திருச்சியில் மதிமுக போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் விரும்புகிறார்கள். எதுவாக இருந்தாலும் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்.
பாஜக - கூட்டணிகள் இந்தியா அளவில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என சொல்கிறார்கள். அதுவும் பாஜக முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் EVM இயந்திரத்தில் புதிய மென்பொருள்களை பயன்படுத்தி குளறுபடி செய்து வெற்றி பெறுவார்களோ என்ற சந்தேகத்தை தற்போது ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்தியா கூட்டணி மக்களோடு நம்பிக்கையில் உள்ளோம். நிச்சயம் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஆண்டுக்கு 2 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் விலை குறைக்கப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார் , ஆனால் இதுவரை எதையும் செய்யவில்லை. குறிப்பாக சிலிண்டர், டீசல் ,பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என குற்றம் சாட்டினார். பாஜக மத அரசியலை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் 39 இடங்களில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
திமுக கூட்டணி மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர் அதன் அடிப்படையிலேயே நான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெறும் என உறுதியாக கூறுகிறேன். கடந்த தேர்தலில் மதிமுக விற்கு பம்பர சின்னம் கிடைக்கவில்லை, அதற்கு பதிலாக புதிய சின்னம் கிடைத்தது. புதிய சின்னத்தில் போட்டியிட்டால் மக்கள் புலம்புவார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே உதயசூரியன் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டோம். ஆனால் இம்முறை எங்களுக்கு ஒதுக்கப்படும் சின்னத்திலேயே நாங்கள் போட்டியிடுவோம், அதுவே எங்கள் நிர்வாகிகளின், தொண்டர்களின் விருப்பம் ஆகும். மேலும் எங்களுடைய விருப்பத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்துள்ளோம், எங்களது விருப்பத்தை அவர் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை எங்களுக்குள்ளது என்று தெரிவித்தார். மத்திய அரசு அறிவித்துள்ள எந்த திட்டத்திற்கும் ,மாநில அரசுக்கு நிதி தரவில்லை என குற்றம்சாட்டினார்.