ஸ்ரீரங்கம் ரயில்வே நிலையத்திற்கு எதிரில் இருக்கும் இந்த மணிஸ் கஃபே ஒரு வீடு போன்ற தோற்றத்தில் காட்சி அளிக்கின்றது. அதுவும் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் எப்படி இருக்குமோ அதே போன்ற ஓடு வேயப்பட்ட முற்றத்துடன் கூடிய வீட்டை உணவகமாக மாற்றி, அங்கே சுவையான உணவுகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக டிபன் வகைகளான இட்லி, கெட்டிச் சட்னி, தோசை, பில்டர் காபி போன்ற உணவு வகைகள் சூடாகவும் சுவையாகவும் கிடைக்கும்போது ரயில்வே ஸ்டேஷன் செல்பவர்கள் அதை சாப்பிடாமல் செல்லவே மாட்டார்கள்.


சாதாரண இட்லி, தோசையில் அப்படி என்ன ஸ்பெஷல்? என்று யோசிக்கும்போது, நினைவுக்கு வரும் விஷயம் என்னவென்றால் 70 ஆண்டு காலமாக சுவை மாறாமல் அதுவும் விறகு அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் தோசை வார்ப்பது, மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களும் ஆரோக்கியமாக இருப்பது போன்ற ஏராளமான சிறப்புகள் சொல்லிக்கொண்டே போகலாம். இங்கு சென்று நாம் டிபன் வகைகளை சாப்பிட்டால் அந்த சுவை மாறாமல் நாவிலேயே இருக்கும் என்று கூறுகின்றனர் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அதுமட்டுமின்றி, அவற்றை சாப்பிட்டுவிட்டு இங்கு கிடைக்கும் பில்டர் காபியையும் குடித்து விட்டு சென்றால் அந்த நாளே அமோகமாக இருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.




மேலும் இங்கு தயாராகும் உணவுகள் பெரும்பாலும் நல்லெண்ணையிலும் மறுமுறை உபயோகப்படுத்தப்படாத சூரியகாந்தி எண்ணெயில் மட்டுமே தயார் செய்கின்றனர். இதன் காரணமாக நமக்கு ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடும் இல்லை என்றே கூறலாம். இப்பேர்பட்ட பழங்கால சிறப்பு வாய்ந்த உணவகத்தின் நிர்வாகி சங்கரன் அவர்களிடம் பேசியபோது, தனது அப்பா 1953 இந்த உணவகத்தை தொடங்கியதாகவும், அதற்குப் பிறகு தனது உடன்பிறந்தவர்கள் இந்த கடையை நடத்தியதாகவும், தற்போது 20 வருடங்களாக தான் நடத்தி வருவதாகவும் கூறினார். மேலும் சாப்பிட வருபவர்களுக்கு வீட்டில்  அமர்ந்து சாப்பிடும் உணர்வை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கடையை தொடர்ந்து மாற்றாமல் அப்படியே நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுவையை எந்த விதத்திலும் மாற்றிவிடக் கூடாது என்பதன் காரணமாக அதே சுவையில் உணவு வகைகளைத் தயாரித்து வழங்கி வருவதாகவும், அதன் காரணமாகவே மக்கள் தங்களது கடையைத் தேடி வந்துகொண்டே இருக்கின்றனர் என்றும் பூரிப்புடன் அவர் தெரிவித்தார். இவற்றில் சில உணவு வகைகளை தானே சமைப்பதாகவும் சங்கரன் தெரிவித்தார். மேலும் தனது மனைவியும் தனக்கு உதவியாக இருப்பார் என்றும் அவர் கூறினார்.




மேலும் காலை 4 மணிக்கு பில்டர் காபி யில் தொடங்கி 5 மணி முதல் சூடான டிபன் உணவுகள் இங்கு கிடைக்கின்றது. ஆனால் 10 மணிக்குள் அனைத்தும் முடிந்து விடுகின்றது. அதற்குள் சுமார் 200 பேர் வரை இங்கு வந்து சாப்பிட்டு விடுகின்றனர். அதிலும் குறிப்பாக இவர்களின் உபசரிப்பே மக்கள் இவர்களை தேடி வர காரணமாக இருக்கிறது என்று கூறுகின்றனர் வாடிக்கையாளர்கள். ரயில்வே நிலையத்திற்கு அருகில் இருப்பதால் அங்கு செல்லும் பயணிகளும் இங்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர். இதன் சுவையை ஒருமுறை ருசித்தவர்கள் அடுத்த முறை எப்படியாவது இங்கு வந்து சாப்பிட்டு விட்டுதான் செல்கின்றனர். 70 ஆண்டு காலமாக சுவை மாறாமல் மணம் மாறாமல் இயங்கி வரும் இந்த மணிஸ் கஃபே திருச்சி மக்களுக்கு மட்டுமல்லாமல், வெளியூர் செல்லும் பயணிகளுக்கும் ஒரு நினைவில் இருந்து நீங்கா கடையாக இருக்கின்றது.