தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தனி விமானத்தின் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு இருந்து சாலை மார்கமாக தஞ்சாவூர் செல்கிறார். இரவு தனியார் விடுதியில் தங்குகிறார். இதனை தொடர்ந்து நாளை காலை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதன் பிறகு சாலை மார்கமாக வரும் முதல்வர் திருச்சி சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்குகிறார். பின்பு மாலை விழா நடைபெறும் கேர் கல்லூரிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று திருச்சி மாவட்டத்தின் பல ஆண்டுகால முக்கிய கனவு திட்டமான பஞ்சப்பூரில் அமையவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு முதற்கட்டமாக 48 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க 140 கோடி, 25 ஏக்கர் பரப்பளவில் கனரக சரக்கு முனையம் அமைக்க  76 கோடி, 152 ஏக்கர் பரப்பளவில் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளுக்கு 75 கோடி, 100 ஏக்கர் பரப்பளவில் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் அமைப்பதற்கு 59 கோடி என 350 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து திட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுதல் உள்பட மொத்தம் 604 கோடியே 10 லட்சம் மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.




இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பஸ் நிலையம், கால்நடை மருந்தக கட்டிடங்கள், மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள், திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப், மலைக்கோட்டை ஒளிரும் மின் விளக்குகளுடன் அழகுப்படுத்தப்படும் பணிகள், தரம் உயர்த்தப்பட்ட தார்சாலை பணிகள், மருங்காபுரி வட்டாரத்துக்கான ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், மன்னார்புரத்தில் மண் பரிசோதனை ஆய்வகம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாகமங்கலம் ஓடைத்துறையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளிட்ட ரூ.153 கோடியே 22 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் அவர், 28 அரசு துறைகளின் மூலம் 45 ஆயிரத்து 344 பயனாளிகளுக்கு ரூ.327 கோடியே 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இந்த விழாவில் மொத்தம் ரூ.1,084 கோடியே 80 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

 



 

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க்க உள்ள தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்ட முழுவதும் பலத்தபாத்துகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்று மாலை திருச்சி விமான நிலையம் வரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க்க அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ், சிவசங்கர், ரகுபதி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மற்றும் அதிகாரிகள் மலர் கொத்து கொடுத்து வரவேற்க உள்ளனர்.