பெரம்பலூர் மாவட்ட பகுதியில் உள்ள சிவன் கோவிலில்களில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நேற்று 4 கால பூஜை நடந்தது. இதில் பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தொடங்கி 4 காலத்திற்கு நடைபெற்ற பூஜைகளையொட்டி மூலவருக்கு வாசனை திரவியங்கள், பால், இளநீர் உள்ளிட்ட சோடஷ அபிஷேக பொருட்களை கொண்டு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தன. தினசரி வழிபாட்டு குழுவினர், வார வழிபாட்டு குழுவினர் மற்றும் சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு திருக்கடைக்காப்பு, திருப்பாட்டு, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளையும், சிவபுராணத்தையும் பாராயணம் செய்தனர். 4 கால பூஜைகளிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரியையொட்டி எளம்பலூரில் பிரம்மரிஷிமலை அடிவாரத்தில் உள்ள நளினாம்பிகை உடனுறை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் யாக வேள்விகளை நடத்தினர். மலை உச்சியில் மகா தீபங்கள் ஏற்றப்பட்டு, 210 சித்தர்கள் வேள்வி நடந்தது. இதனைத்தொடர்ந்து காகன்னை ஈஸ்வரர் கோவிலில் ருத்ரஜெபம், ருத்ரவேள்விகள், பன்னிரு திருமுறைகள், சிவபுராண பாராயணத்துடன் நடந்தது. பூரண கும்பம் வைக்கப்பட்டு கலச வழிபாடும், 108 சங்காபிஷேகமும், ஒவ்வொரு கால பூஜை நிறைவடைந்ததுடன் மூலவருக்கு அபிேஷகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.





 

இதேபோல் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவிலும் மகா சிவராத்திரியையொட்டி 4 கால பூஜைகள் நடந்தது. ஒவ்வொரு கால பூஜையிலும் மூலவருக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில், துறைமங்கலத்தில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது. வடக்குமாதவி சாலையில் சமத்துவபுரம் அருகே உள்ள மகாலிங்க சித்தர் சுவாமிகள் அதிஷ்டானத்திலும், பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் சுவாமிகளின் மடத்திலும், சிவராத்திரியையொட்டி நேற்று இரவு ருத்ர வேள்விகள், ருத்ர ஜெபவழிபாடு விடிய விடிய நடந்தது.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண