Pachamalai Hills: ஊர் சுற்றலாம் வாங்க....இயற்கை அழகை தன்னுள் கொண்டுள்ள பச்சைமலை பற்றி பார்ப்போம்

கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் இயற்கை அழகு, மட்டுமல்லாது பட்டாம்பூச்சிகள், அருவிகள் என நமக்கு ஒரு பொழுதுபோக்கு சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது தான் பச்சைமலை இதை பற்றி பார்ப்போம் ...

Continues below advertisement

தமிழகத்தில் கோடை விடுமுறை என்றாலே அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்கள், பூங்காகள் என பல சுற்றுலாதலம் இருந்தாலும்,  இயற்கையை தன்னுள் கொண்டு உள்ள பல இடங்களும் இங்கு உண்டு. அதில் ஒன்றுதான் இந்த பச்சை மலை. திருச்சியில் இருந்து இருந்து 2 மணி நேரம் பயணம் செய்தால் இந்த பச்சை மலையை அடைந்து விடலாம். திருச்சியிலிருந்து துறையூர், அங்கிருந்து ஆத்தூர் சாலையில் சென்று உப்பிலியபுரம், அங்கிருந்து சோபனபுரம் வழியாகச் சென்றால் பச்சைமலையை அடையலாம். அல்லது பெரம்பலூர் சாலையில் சென்றால் செங்காட்டுப்பட்டி என்ற ஊரின் வழியாக மூலக்காடு என்ற இடத்திற்குச் சென்று அங்கிருந்து பச்சைமலைக்கு செல்லலாம். இதன் இரண்டு பக்கம் செல்லும் வழியெல்லாம் அருவிகள், பச்சைக்காடுகள், வயல்வெளிகள் எனக் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் பல இடங்கள் காணப்படுகிறது. இங்கே காணும் இடமெல்லாம் பசுமை போர்த்தியது போல் பச்சைப்பசேலென்ற மரங்கள், புல்வெளிகள் செடிகள் ஆகியவை நிறைந்துள்ளன. மேலும் இயற்கையால் இந்த மலை சூழ பட்டுள்ளதால் எந்தப் பக்கம் திரும்பினாலும் குளிர்ந்த காற்று மற்றும் செடிகளின் மூலிகை வாசனை நம் மனதிற்கு இதம் அளிக்கிறது.

Continues below advertisement


இதுமட்டுமல்லாமல் இங்கு பறவைகள் கூட்டம், பட்டாம்பூச்சிக் கூட்டம் என்று உயிரினங்களுக்கும் பஞ்சமில்லை. போகும் வழியெல்லாம் பெரிய பெரிய மரங்கள் அதில் விளையாடும் சிறுவர்கள் என்று கட்டடங்கள் இல்லாத, எந்த வாகனங்கள் சத்தமும் இல்லாத ஒரு இடமாக அமைந்துள்ளது. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம்தான் இந்த பச்சைமலை. இந்த மலையில்  வனத்துறை கணக்கெடுப்பின்படி, 154 பறவை இனங்கள் வாழ்கின்றன. மேலும் இந்த மலைப்பகுத்திக்கு 135 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வந்து செல்கின்றன.


வாகன இரைச்சல் ஏதும் இல்லாத காரணத்தால், இங்குள்ள பறவைகளும் தங்களது வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஒரு குளிர்ந்த மலை பகுதியாக இந்த பச்சை மலை உள்ளது.மலையின் அடிவாரத்திலிருந்து மேலே செல்ல ஆரம்பிக்கும் போது மேகங்களெல்லாம் கீழே இறங்கி. ஒரு அழகான அனுபவத்தைக் கொடுக்கும்.


மேலும் இங்குள்ள அருவிகளில் சத்தமானது ஒரு இதமான உணர்வை தருகிறது. ஓங்கி விழும் நீரின் சத்தத்தைக் கேட்கும் போதே, மனதிற்கு ஒரு நிம்மதி கலந்த மகிழ்ச்சி கிடைக்கும். இந்த பச்சைமலையில் மங்களம் அருவி, எருமைப்பள்ளி அருவி, மயிலூற்று அருவி, கோரையாறு அருவி எனப் பல அருவிகள் இருக்கின்றன. இதில் எருமைப்பள்ளி, கோரையாறு அருவிகளுக்கு வனத்துறையினரின் அனுமதி, பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்ய அனுமதியில்லை. இத்தனை அருவிகளும் ஓரே மலையில் அமைந்துள்ள காரணத்தால் பச்சைமலை ’அருவிகளின் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது.


இதுமட்டுமல்லாமல், பேலூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் இங்கு இருக்கிறது. பச்சைமலை தென்புறனாடு, வன்னாடு, கோவைநாடு என்று மூன்று கிராமங்களாக பிரிக்கப்பட்டு அங்கு மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர்.மேலும் சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகளும் இந்த  பச்சைமலையில் தான் உற்பத்தியாகின்றன. மொத்தத்தில் பச்சைமலை  அருவிகள் நிறைந்த ஒரு சிறந்த சுற்றுலாப் பகுதி மட்டுமல்லாமல், இயற்கையின்  உறைவிடமாகத் திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை.

Continues below advertisement
Sponsored Links by Taboola